வாழ்வை தொடங்கும் முன்னரே உயிரை பறித்த காலன் : மணக் கோலத்திலேயே மணமகன் மரணம்!- கதறிய மணப்பெண்

0 527829
மரணமடைந்த விக்னேஸ்வரன்

ராமநாதபுரம் கடலாடி அருகே காலையில் திருமணம் நடந்த நிலையில் மாலையில் மணமகன் மாரடைப்பால் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள இளஞ்செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் விக்னேஸ்வரன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாதாரம் தேடி திருச்சிக்கு சென்று மலைச்சாமி குடும்பம் அங்கேயே தங்கி விட்டது. மிலைச்சாமிக்கு தன் மகன் விக்னேஸ்வரனுக்கு தனது ஊரிலேயே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டுள்ளார். இதனால், பூர்வீக கிராமமான இளஞ்செம்பூர் கிராமத்திற்கு வந்து தனது மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை விக்னேஸ்வரனுக்கு பேசி முடித்தனர். கடந்த 24ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கோயிலில் விக்னேஸ்வரனுக்கும் அந்த பெண்ணுக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதையடுத்து, மணமகன் விக்னேஸ்வரன் மணமகள் வீட்டுக்கு பால் பழம் சாப்பிடும் நிகழ்வுக்கு சென்றுள்ளார். மணப் பெண் வீட்டார் பால்,பழம் சாப்பிட கொடுத்த சமயத்தில் விக்னேஸ்வரனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்சை பிடித்துக் கொண்டு துடித்துள்ளார். இதைப் பார்த்த மணமகள் வீட்டார் பதறிப் போனார்கள். பின்னர், விக்னேஸ்வரனை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிக் கொண்டு ஓடினர். விக்னேஸ்வரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னரே இறந்து விட்டதாக கூறி விட்டனர்.இதனால், மணப்பெண் கதறி துடித்தது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

தொடர்ந்து, விக்னேஸ்வரனை உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.திருமணம் முடிந்த தினத்திலேயே மணமகன் உயிரிழந்தது மணமக்கள் வீட்டாரையும், கிராம மக்களையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments