வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு..! சட்டமுன்வடிவு நிறைவேற்றம்

கல்வி, வேலைவாய்ப்பில் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ஒதுக்கீடு வழங்க நோக்கம் மற்றும் காரணங்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், அம்பாசங்கர் ஆணையப் பரிந்துரைப்படி தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மிகப் பிற்படுத்தப்பட்டோரில் 108 சாதிகள் உள்ள நிலையில் இதில் எண்ணிக்கையில் அதிகமுள்ள வன்னியர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காததால் தனி இட ஒதுக்கீடு வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மூன்று பிரிவுகளாகப் பிரித்து வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடும், சீர்மரபினருக்கு ஏழு விழுக்காடும், மிகப் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மற்ற சாதிகளுக்கு இரண்டரை விழுக்காடும் வழங்கலாம் எனப் பரிந்துரைத்ததாகக் குறிப்பிட்டுள்ளது. அதை ஏற்று இடஒதுக்கீட்டுக் கொள்கையில் நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி இதற்கான சட்டமுன்வடிவைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்துக் குரல் வாக்கெடுப்பில் உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
Comments