’மதுரைல எத்தனை தலையை உருட்டியிருக்கோம் தெரியுமா?’ - கோயில் பணத்தை கொள்ளையடித்து உதார்விட்டவர்களுக்கு சராமரி உதை..!
நாமக்கல், பரமத்தி சேற்றுக்கால் மாரியம்மன் கோயிலில் கொள்ளையடித்த திருடர்கள், பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது பொதுமக்களிடம் வசமாக சிக்கினர். சிக்கிய கொள்ளையர்கள், ’நாங்கள் யார் தெரியுமா? காலேஜ் ஸ்டூடண்ட் நானு... ஆனால், பொறுமைய இழந்துட்டேன், அவ்வளவுதான்’ என்று எகத்தாளத்துடன் பேசி பொதுமக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது...
நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் பிரசித்தி பெற்ற சேற்றுக்கால் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் ஹெல்மெட் அணிந்துகொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் கோயில் காவலாளி கணேசனைத் தாக்கி, அறையில் அடைத்து விட்டு, கோயிலின் பூட்டை உடைத்துவிட்டு அம்மனின் தங்கத்தாலி, மூக்குத்தி மற்றும் வெள்ளி கிரீடம் ஆகியவற்றுடன் கோயில் உண்டியலிலிருந்த ரூ.50,000 பணத்தையும் கொள்ளையடித்து விட்டுச் சென்றனர்.
அறைக்குள் அடைக்கப்பட்ட காவலாளி செல்போன் மூலம் கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான், கொள்ளையர்கள் மூன்று பேரும் கொள்ளையடித்த பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கினர்.
பரமத்தியிலிருந்து தப்பிய கொள்ளையர்கள் மூன்று பேறும், கீரம்பூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொள்ளையடித்த பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர். அதைக் கண்ட பொதுமக்கள் அவர்களிடம் சென்றபோது, மூன்றுபேரும் தப்பியோட முயற்சி செய்தனர். இதையடுத்து, மூன்று இளைஞர்களையும் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து, கை கால்களைக் கட்டிப் போட்டனர். இதையடுத்து, மதுரை பாஷையில் அவர்கள் பொது மக்களை மிரட்டியபோது மூன்று பேருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்...
பொது மக்களின் வாங்கிய அடியால் பொங்கிய இளைஞர்கள், “போலீஸ் வரட்டும், எங்களைக் கைது செய்யட்டும். அதுக்கு அப்புறம் நாங்கள் யார் என்று தெரியும். எங்கள அட்டிச்சிட்டீங்கள்ள... நாங்கள் வெளியே வந்ததுக்கு அப்புறம் இந்த ஊர் எப்படி பதறும்னு பாருங்கள்” என்று உதார் விட்டனர்.
அதற்குப் பிறகும் பொதுமக்கள் அவர்களை அவிழ்த்து விடாததால், “மதுரைல எத்தனை தலையை கலட்டிருக்கோம் தெரியுமா, இப்போ கத்தி இல்லாம இருக்கோம்... யூ டியூப்ல என்னுடைய புகைப்படைத்தை போட்டு பாருங்க... எத்தனை தலையை கலட்டிருக்கோம்னு தெரியும், நானும் கல்லூரி மாணவன் தான். ஆனால் பொறுமையை மட்டும் இழந்தேன் அவ்வளவு தான்... போலீஸ் வந்தாலும் கை கால்களைத் தான் உடைக்க முடியும், தூக்கில் போட முடியாது” என்று அங்கிருந்தவர்களை மிரட்டிப் பார்த்தனர்.
அவர்கள் மூன்று பேரும், கையும் களவுமாக சிக்கிக் கொண்டது பற்றி கவலைப் படாமல், எகத்தாளத்துடன் பேசியதைக் கேட்டதும் பொறுமை இழந்த பொதுமக்கள், “எங்க ஊருக்கே வந்து எங்களை மிரட்டுறியா?” என்று கேட்டு தர்ம அடி கொடுத்தனர்.
அதற்குப் பிறகு, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி போலீசார் அந்த 3 திருடர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மூன்று பேரும் மதுரையைச் சேர்ந்த ராசு, முருக சூர்யா, கருப்பசாமி என்றும், மூன்று பேரும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு சிறைக்குச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... இந்த சம்பவம் பரமத்தி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!
Comments