வீட்டு வேலைகளை செய்ததால் கணவனிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி - நீதிபதியின் தீர்ப்பால் சர்ச்சை..!

0 33520

திருமணமானதில் இருந்து 5 ஆண்டுகளாக வீட்டு வேலைகளை கவனித்து வந்த முன்னாள் மனைவிக்கு ஊதியமாக ஐந்தரை லட்சம் ரூபாய் வழங்குமாறு வழக்கு ஒன்றில் சீன நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவாதப்பொருளாக மாறியுள்ளது.

நடப்பாண்டில் சீனாவில் புதிய சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டில் கூடுதலான பொறுப்புகளை ஏற்று அதனை செயல்படுத்தி வரும் கணவனோ அல்லது மனைவியோ அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற கோரிக்கை வைக்கலாம் என்று புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு பெய்ஜிங் நீதிமன்றத்தில் கணவரிடம் விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி ஒருவர் தொடர்ந்த வழக்கு சர்ச்சையை எழுப்பியுள்ளது. Chen என்பவரை Wang என்பவர் திருமணம் செய்து 5 ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற நிலையில் மனைவியாக தான் செய்த வேலைகளுக்கு கணவரிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின் போது, ”திருமணமானதில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குழந்தையை கவனிப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற பொறுப்புகளை தான் மட்டுமே கவனித்து வந்ததாகவும், தனது கணவர் எதையும் செய்யாமல் அலுவலக வேலைகளை பார்த்து வந்ததாகவும் மனைவி வாங் சார்பில் வாதிடப்பட்டது. அதுமட்டுமின்றி வீட்டு வேலை மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொண்டதால் தனக்கு கூடுதல் இழப்பீடு தர வேண்டுமெனவும் வாங் கோரிக்கை விடுத்தார்”. வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, வீட்டுப்பொறுப்புகளை மனைவி கவனித்து வந்ததால் அதற்காக 50,000 யுவான் அதாவது 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயையும், குழந்தையை கவனித்து வருவதால் மாதந்தோறும் 2000 யுவான் அதாவது 22 ஆயிரத்து 500 ரூபாயையும் ஜீவனாம்சமாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

வீட்டு வேலைகளை நிர்வகித்து வந்த மனைவிக்கு குறிப்பிட்ட தொகையை அளிக்க உத்தரவிட்ட நீதிபதியின் தீர்ப்பு சீனாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. 5 ஆண்டுகளாக குடும்ப பொறுப்பை ஏற்ற மனைவிக்கு ஐந்தரை லட்சம் ரூபாய் வழங்குவது மிகவும் குறைவான தொகை எனவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். சீனாவில் ஒரு நாளைக்கு 4 மணி நேர உழைப்பை ஊதியமின்றி பெண்கள் செலவிடுவதாகவும், இது ஆண்களை காட்டிலும் 2.5 மடங்கு அதிகம் என்றும் அந்நாட்டின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு கணித்துள்ளது. இதற்கிடையே கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் விவாகரத்து கோரும் வழக்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments