மூன்று சிறைகள் 38,000 கைதிகள்... தொடர் சங்கிலியாக வெடித்த கலவரத்தில் 75 பேர் பலி!

0 6963

ஈக்வடார் நாட்டில் உள்ள 3 சிறைகளில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் சிறைச்சாலைகள் ராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் சிறைச்சாலைகளின் நிலை மோசமான சூழலில் இருந்து வருகிறது. நாட்டில் மொத்தமாக உள்ள 60 சிறைச்சாலைகளில் 29 ஆயிரம் கைதிகளை வைத்திருக்கலாம். ஆனால், இதுவரை குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட 38 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் ஈக்வடார் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அளவுக்கு அதிகமான கைதிகளை குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைப்பதால் அவ்வபோது சிறைச்சாலைகளில் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. சிறைக்காவலர்களின் பற்றாக்குறையும் கைதிகளின் மோதல்களுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. 38 ஆயிரம் கைதிகளை கொண்ட சிறைகளை கண்காணிக்க வெறும் 1500 சிறைக்காவலர்களே உள்ளனர். காவலர்களை காட்டிலும், கைதிகளின் கைகள் ஓங்கிய நிலையில், ஆயுத கடத்தல், போதைப்பொருள் பயன்பாடு போன்ற குற்றச்சம்பவங்கள் சிறைச்சாலைகளில் அரங்கேறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவ்வபோது போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் கைதானவர்கள் தனித்தனிக்குழுக்களாக பிரிந்து கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதேபோன்று லாஸ் பைபோஸ் , லாஸ் லோபோஸ் மற்றும் டைக்ரோன்ஸ்  சிறைகளில் ஒரே நேரத்தில் கைதிகளிடையே கலவரம் வெடித்தது. ஈக்வடாரின் தெற்கு பகுதியின் குயன்கா  நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கலவரமாக வெடித்தது. அதில், கூர்மையான ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் கொண்டும் அவர்கள் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு முன்னதாக மேற்கு பகுதியின் துறைமுக நகரமான குயாகுவில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 21பேர் உயிரிழந்தனர்.

இதேபோன்று மத்திய பகுதியில் அமைந்துள்ள லடகுங்கவா நகரில் உள்ள சிறையிலும் கைதிகள் இடையில் மோதல் ஏற்பட்டதில் 8பேர் பலியாகினர். தகவலறிந்து 3 சிறைகளுக்கும் விரைந்த பாதுகாப்பு படை வீரர்கள் கைதிகளின் கலவரத்தை தடுத்ததுடன்,
சிறைச்சாலைகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறைக்கலவரம் குறித்த தகவல் அறிந்ததும் சிறைச்சாலைகளுக்கு வெளியே குவிந்த கைதிகளின் உறவினர்கள், அவர்களின் நிலையறியாது கண்ணீர் சிந்தினர். கடந்த ஆண்டும் இதேபோன்று சிறைக்கைதிகளுக்கு இடையே கலவரம் வெடித்ததில் 51 பேர் உயிரிழந்தனர். அதன் காரணமாக 90 நாட்களுக்கு சிறைச்சாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments