’குப்பைத் தொட்டியில் போடும் உணவைக் கூட சாப்பிட விடாத கொடுமைக்காரி’ - உலகை உலுக்கிய சிங்கப்பூர் பணிப்பெண்ணுக்கு நடந்த கொடுமை

0 55181
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள காயத்ரி

னது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற கனவுடன், சிங்கப்பூருக்கு வந்த மியான்மர் பணிப்பெண் ஒருவர் இந்திய வம்சாவளி பெண்ணால் கொடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு, 2016 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 - ம் ஆண்டு, மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங் இங்கை டொன் என்பவர் தனது மூன்று வயது மகனை எப்படியாவது நல்ல முறையில் வளர்த்துவிட வேண்டும் எனும் நோக்கத்துடன் சிங்கப்பூருக்கு வீட்டுவேலை செய்வதற்காக வந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பியாங் இங்கை, இந்திய வம்சாவளி பெண்ணான காயத்ரி என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு, கைபேசி பயன்படுத்தக்கூடாது, ஒரு நாள் கூட தவறாமல் வேலைக்கு வரவேண்டும், சுத்தமாக இருக்கவேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த நிபந்தனைகளை ஏற்றுப் பணிக்குச் சேர்ந்தார் பியாங் இங்கை.

பியாங் இங்கை எப்படி வேலை செய்தாலும் அந்த வேலையில் காயத்ரிக்கு திருப்தி ஏற்படவில்லை. வேலை சுத்தமாக இல்லை, மெதுவாக செய்கிறாய் என்று தொடர்ந்து கடுமையாகத் திட்டியுள்ளார் காயத்ரி. பிறகு மோசமாக அடித்துள்ளார். பணிப்பெண்ணைக் கவனிப்பதற்கென்றே கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளார். போதிய உணவு கொடுக்கவில்லை. தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பழைய சோறைக் கூட குறைவான அளவே கொடுத்துள்ளார். பசி கொடுமையால் தவித்த பியாங் இங்கை, தன் மகனைத் தவிக்கவிட்டு இறந்துவிடக் கூடாது என்பதற்காக, குப்பை தொட்டியில் போடுவதற்கு வைத்திருந்த உணவைக் கூட சாப்பிட முயற்சி செய்துள்ளார். ஆனால், அதைக் கூட காயத்ரி தடுத்துள்ளார். 5 மணி நேரத்துக்கு மேல் தூங்கக் கூடாது, கழிவறைக்குச் சென்றால் கூட கதவை தாழிடக் கூடாது. மீறினால் அடி, உதை என்று கொடுமைகளை அனுபவித்துள்ளார் பியாங் இங்கை. கன்னத்தில் அறைவது, முகத்தில் குத்துவது, உதைப்பது, தள்ளி விடுவது, துன்புறுத்தல் என்று வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடாத கொடுமைகளை அனுபவித்துள்ளார் பியாங் இங்கை.

2016 - ம் ஆண்டு துணிகளைத் தேய்த்துக்கொண்டிருந்த போது, இஸ்திரி பெட்டியாலேயே கை, நெற்றி மீது சூடு வைத்துள்ளார் காயத்ரி. காயத்ரியின் கொடுமையால் 14 மாத காலத்தில் 15 கிலோவுக்கும் மேல் எடை குறைந்து போனார் பியாங் இங்கை டொன்.

இந்த நிலையில், கடந்த 2016 - ம் ஆண்டு ஜூலை மாதம், 25  ம் தேதியன்று, பியாங் இங்கையின் கைகளை ஜன்னலில் கட்டிவைத்து  கொடுமைப் படுத்தியுள்ளார் காயத்ரி. ஈரத்துணியுடன் அப்படியே நிற்கவைத்து வயிற்றிலேயே எட்டி உதைத்துள்ளார். அந்த இரவு முழுவதும் வலி மற்றும் வேதனையுடன் படுத்த பியாங் இங்கை டொன்,  அடுத்த நாள் காலை, வழக்கம் போல காயத்ரி எட்டி உதைத்து எழுப்பிய போது கண்விழிக்கவே இல்லை. மருத்துவர்கள் வந்து பரிசோதித்த போது பியாங் இங்கை மரணமடைந்தது தெரியவந்தது.

பிரேதப் பரிசோதனையின் போது பியாங் இங்கையின் உடலில் 47 காயங்கள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. மேலும், அவர் இறந்த போது 24 கிலோ எடை மட்டுமே இருந்துள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரித்து காயத்ரி, அவரது தாயார் மற்றும் கணவரைக் கைது செய்தனர்.

தன் குழந்தையைக் காப்பாற்றி அவனது எதிர்காலத்துக்காக சிங்கப்பூர் வந்த பியாங் இங்கை, கடைசியில் தன் மகனைப் பார்க்காமலேயே இறந்து போனார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பியாங் இங்கை வேவு பார்ப்பதற்காக காயத்ரி வீட்டில் பொருத்திய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளன. பணிப்பெண் பியாங் இங்கை கொடுமைப்படுத்தப்பட்ட காட்சிகளைப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த கொடுமைக் காட்சி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் காயத்ரியின் கணவர் காவல்துறையில் பணிபுரிந்தவராவார்.

நீதிமன்ற விசாரணையில், காயத்ரியின் வழக்கறிஞர், ”தாய்மை அடைந்திருந்தததால் காயத்ரி கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார்.  'ஓசிடி' எனப்படும் மனநலப் பிரச்சினையால் தான் அப்படி கொடுமையாக நடந்துகொண்டார்” என்று வாதிட்டுள்ளார். ஆனால், அந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு விசாரணை முடிவில், காயத்ரி, அவரது தாயார் மற்றும் கணவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments