நடுத்தெருவில் குடுமிப்பிடி சண்டையிட்ட ஊராட்சித் தலைவர்கள் - செய்வதறியாது திகைத்த கிராமத்தினர்..!

0 11544

ராட்சி மன்றத் தலைவரும், துணைத் தலைவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக நடுத்தெருவில் ஒருவரது குடுமியை ஒருவர் பிடித்து அடித்துக் கொண்ட சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலதொழுவு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த தங்கமணி. அதே ஊராட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த சத்யப்பிரியா. இருவரும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பஞ்சாயத்தை நிர்வகிப்பதில் முட்டலும் மோதலும் நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிராம மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மெத்தனம் காட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

image

இதனால் பாலதொழுவில் புதிதாக ஆழ்குழாய்க் கிணறு அமைக்கத் தமிழக அரசிடம் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயைத் தலைவர் தங்கமணி பெற்றுள்ளார். இந்தத் தொகையை கொண்டு போர்வெல் அமைக்கத் துணைத்தலைவரின் கையொப்பமும் வேண்டும் என்பதால் சத்யபிரியாவிடம் கையெழுத்திடத் தங்கமணி கேட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பக்கமே செல்லாமல் போக்குக் காட்டி வந்ததாகக் கூறப்படும் துணைத் தலைவர் சத்யபிரியா, நிர்வாகப் பணிகளைச் செய்யாமல் தொந்தரவு செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போர்வெல் அமைப்பதற்கான கையொப்பம் போடாமல் அலைக்கழிப்பதைத் தட்டிக்கேட்க சத்யப்பிரியாவின் வீட்டிற்குத் தலைவர் தங்கமணி சென்றுள்ளார். அப்பொழுது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம், உங்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கு சத்யப் பிரியா தான் காரணம் என்றும், போர்வெல் அமைக்கக் கையொப்பமிடாமல் அவர் அலைக்கழிப்பதாகவும் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்யப்பிரியா தங்கமணியின் கன்னத்தில் அடிக்கப் பதிலுக்குத் தானும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சத்யப்பிரியாவின் தலைமுடியைப் பிடித்து தங்கமணி தாக்கினார். நடுச்சாலையில் ஒருவரை ஒருவர் வசைபாடி அடித்துக் கொள்ள அங்கிருந்தவர்கள் தான் செய்வதறியாது திகைத்தனர்.பின்னர் இருவரும் தனித்தனியாகச் சென்னிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் தங்கமணி அளித்த புகாரின் பேரில் துணைத்தலைவர் சத்யப்பிரியா மீது 4 பிரிவின் கீழும், துணைத்தலைவர் சத்யப்பிரியா அளித்த புகாரின் பேரில் தலைவர் தங்கமணி மீது 3 பிரிவின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மக்கள் பிரச்சனையைத் தீர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களே நடுத்தெருவில் கொண்டையைப் பிடித்துக் கொண்டு சண்டைபோட்டுக் கொண்டால் தங்கள் பிரச்சனையை எங்குச் சென்று சொல்வது என்ற குழப்பத்தில் பொதுமக்கள் ஆழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments