மரித்துவிடாத மனிதம்... வீட்டை விற்று பேரக்குழந்தைகளைப் படிக்கவைத்த முதியவருக்குக் குவியும் நிதி!

0 7354
ஆட்டோ ஓட்டுநர் தேஸ்ராஜ்

காராஷ்டிராவில் மகன்கள் உயிரிழந்த நிலையில் பேரக் குழந்தைகளின் நலன் மற்றும் கல்விச் செலவுக்காக சொந்த வீட்டை விற்று, ஆட்டோவில் வாழ்ந்து வந்த முதியவருக்கு ரூ. 24 லட்சம் நன்கொடையை வாரி வழங்கி நெகிழவைத்துள்ளனர் தன்னார்வலர்கள்.

மும்பையைச் சேர்ந்த, 74 வயது முதியவரான தேஸ்ராஜ் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். ஆறு வருடங்களுக்கு முன்பு அவரது மூத்த மகன் காணாமல் போன நிலையில் ஒரு வாரம் கழித்து இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அடுத்த சில வருடங்களில் அவரது இரண்டாவது மகனும் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு மகன்களும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவி, மருமகள்கள் மற்றும் 4 பேரக் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் தேஸ்ராஜ்.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், பேரக் குழந்தைகளையும் நல்ல முறையில் படிக்கவைத்தார். ஆட்டோ ஓட்டி கிடைக்கும் வருமானம் பேரக் குழந்தைகளின் கல்விச் செலவுக்கே சரியாக இருக்க, பல நாட்கள் அவரது குடும்பம் பட்டினியில் தவித்தது. இந்த நிலையில் தான் அவரது பேத்திக்கு டெல்லியில் பி.எட் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், செலவு செய்ய பணம் இல்லாததால், ஆசிரியராக வேண்டும் என்ற தனது பேத்தியின் கனவை நிறைவேற்றும் விதமாக, குடியிருந்த வீட்டை விற்று கல்லூரி கட்டணத்தை செலுத்தினார். மனைவி, மருமகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் தங்கவைத்துவிட்டு, மும்பையில் அவர் ஓட்டியே ஆட்டோவே அவருக்கு வீடாகிப் போனது. உண்பது, உடுத்துவது, தூங்குவது எல்லாம் அந்த ஆட்டோவில் தான்.

இதையடுத்து, Humans of Bombay எனும் சமூக வலைத்தள பக்கத்தில் தேஸ்ராஜ் குறித்த செய்தி வெளியாகி, மும்பை வாசிகள் பலரையும் கண் கலங்க வைத்தது. இதையடுத்து, அவர் விற்ற வீட்டை மீண்டும் வாங்கிக்கொடுக்க, 20 லட்சம் நிதி திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து சமூக ஆர்வலர்கள் செயல்படத் தொடங்கினர். பலரும் தேஸ்ராஜ்க்கு தாராளமாக நிதி அளிக்க, நிர்ணயித்த இலக்கை விடவும் அதிகமாக, 24 லட்சம் ரூபாய் நன்கொடைகளைத் திரட்டி முதியவரிடம் கொடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

நல் உள்ளம் கொண்ட பலரிடமிருந்து வந்துள்ள உதவியைக் கண்டு திக்குமுக்காடிப் போய் உள்ளார், 74 வயது முதியவரான தேஸ்ராஜ். இந்த நிதி மூலம், தேஸ் ராஜ் தான் விற்ற வீட்டையும் மீட்க முடியும், தன் பேரக் குழந்தைகளைப் படிக்கவைத்து, நல்ல முறையில் பார்த்துக்கொள்ள முடியும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments