‘தனிமையால் தற்கொலை செய்துகொள்ளும் ஜப்பானியர்கள்...’ - தனிமை அமைச்சகத்தை ஏற்படுத்தியது ஜப்பான்!

0 2446

ப்பான் நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித் துறையையே உருவாக்கி அமைச்சரை நியமித்துள்ளது ஜப்பான் அரசு.

ஜப்பான் நாட்டில், தனிமை என்பது நீண்டகாலமாகவே ஒரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜப்பான் பெண்கள் இந்தப் பிரச்னையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை இல்லாமலும், உரிய வயதடைந்தும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் தனிமையிலேயே வாழ்ந்து, அதீத மன அழுத்தத்தில் தவித்து வருகிறார்கள். துணை இல்லாமல் இருப்பவர்கள், தனிமையைப் போக்குவதற்காகவே நீண்ட தூரம் பயணித்து, வேலை செய்து வருகிறார்கள். துணை இல்லாமல் இருப்பவர்கள் தனிமையை உணரக்கூடாது என்பதற்காக, அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டு இருக்க ரோபோவைக் கூட ஜப்பான் பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அந்த அளவுக்கு, அங்கு தனிமையானது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்த சூழலில் தான், 2020 - ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜப்பான் மக்கள் அதிகம் தனிமையில் வாடத் தொடங்கினர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்றை விடவும் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகும். 2020 ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1765 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில் 2153 பேர் தனிமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். இதே அக்டோபர் மாதத்தில் மட்டும் 879 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். இது, பெண்களின் தற்கொலையானது 2019 - ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 70 சதவிகிதம் அதிகம் ஆகும். அந்த அளவுக்கு மோசமாக உள்ளது ஜப்பானின் நிலைமை.

இதனால், ஜப்பான் அரசு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், Tetsushi Sakamoto வை ‘தனிமை அமைச்சராக நியமித்துள்ளார் ஜப்பான் பிரதமர்.

இது குறித்து தனிமை அமைச்சரான Tetsushi Sakamoto, “சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

2017 - ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில், ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தாங்கள் எப்போதும் தனிமையை உணர்வதாகக் கூறியதையடுத்து, 2018 ம் ஆண்டில் தனிமை அமைச்சரை இங்கிலாந்து அரசு முதல்முறையாக நியமித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பான் நாடு தனிமை அமைச்சரை நியமித்ததையடுத்து, ஆஸ்திரேலியாவும் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments