மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

0 4713
ஜெயலலிதாவின் 73 பிறந்த நாள் அதிமுக சார்பில் கொண்டாட்டம்

 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் 73 கிலோ எடைகொண்ட கேக்கை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர்.

நமது புரட்சித் தலைவி அம்மா என்னும் பெயரிலான சிறப்பு மலரை வெளியிட்டதுடன், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.

இந்த ஆண்டு முதல் ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிச் சென்னை காமராசர் சாலையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தல் ஆகியவற்றுக்காகத் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நர்மதாவுக்குப் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய 3 மாவட்டங்களுக்கும் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதன் அடையாளமாக மரக்கன்றை நட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றினார்.

 சென்னைக் கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைக் காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் தொடர்பாக டிஜிட்டல் வீடியோ காட்சிகளை காணலாம். அங்கு ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் காட்சிகள் திரையிடப்படுகின்றன. 2டி அனிமேஷன் வீடியோக்கள் இடம் பெறுகின்றன. 50 பேர் அமரும் வசதியுடன் கூடிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments