குழந்தைகளுக்காக பட்டினி கிடந்த தாய்... கலங்கிய கண்களுடன் ஒடோடி வந்து உதவிய அரசு அதிகாரிகள்!

0 98519
குழந்தைகளுடன் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் தராணிகா

கொரோனா லாக்டவுன் காரணமாக குழந்தைகளுக்காக தான் சாப்பிடாமல் பட்டினி கிடந்து மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உதவிகள் குவிந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரை சேர்ந்தவர் வீராசாமி- உஷா தம்பதி. இவர்களுக்கு பாலா, அன்பு என்ற இரு ஆண் குழந்தைகளும் தரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். வீட்டு வேலை செய்து தன் குழந்தைகளை உஷா காப்பாற்றி வந்தார். இதற்கிடையே, கொரோனா லாக்டவுன் காரணமாக பல வீடுகளில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், குழந்தைகளுடன் பட்டினி கிடந்துள்ளார். கிடைத்த உணவை குழந்தைகளுக்கு மட்டும் கொடுத்து விட்டு உஷா பட்டினியாகவே இருந்துள்ளார் . பல வேளையில் தண்ணீர்தான் அவருக்கு சாப்பாடாக இருந்து வந்துள்ளது. இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருந்துள்ளார். குழந்தைகளும் செய்வதறியாது திகைத்துள்ளன.

எலும்பும் தோளுமான மெலிந்த நிலையில் உஷா இருந்துள்ளார். குழந்தைகளும் செய்வதறியாது திகைத்துள்ளன. உஷாவின் நிலையை கண்டு வருந்திய அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பக்ருதீன், பிரபு உள்ளிட்ட இளைஞர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உஷா மற்றம் அவரின் குழந்தைகள் நிலை குறித்து மீடியாக்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, பல முனைகளில் இருந்து அவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் முன்வந்தனர்.

பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர் தாசில்தார் தரணிகா  ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று உஷாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். முதல்கட்டமாக ரேசன் கார்டு வழங்கவும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. தாசில்தார் தராணிகா, உஷாவிடத்தில் கருணையுடம் பேசினார். அப்போது, 'தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ... ' என்று கூறி உஷா கண்ணீர் விட்டார். இதைப் பார்த்து  கண் கலங்கிய தாசில்தார் தரணிகா 'உங்கள் குழந்தைகள் நல்லபடியாக இருப்பார்கள்' என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து, குழந்தைகள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அப்போது, குழந்தைகள் பிரிந்து செல்வதை கண்டு அழுதார். அவருக்கு தாசில்தார் தராணிகா  ஆறுதல் அளித்தார். உடல் நன்றாக குணமடைந்ததும் குழந்தைகளை சென்று பார்க்கலாம் என்று அவரிடத்தில் உறுதியளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு புதிய துணிகள், சட்டைகள் எடுத்து கொடுக்கப்பட்டன. குழந்தைகளுடன் உஷா பேசுவதற்கு வசதியாக  உஷாவககு செல்போன் ஒன்றையும் வாங்கி கொடுத்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், உஷாவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments