ஐ படம் போல நிஜ சம்பவம்..! இளைஞர் அலங்கோலமான விபரீதம்

0 70867
ஐ படம் போல நிஜ சம்பவம்..! இளைஞர் அலங்கோலமான விபரீதம்

மதுரையில் சுண்டுவிரல் காயத்துக்கு சிகிச்சைக்கு சென்ற இளைஞருக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக உடல் முழுவதும் வெந்து புண்ணான அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அழகான இளைஞருக்கு ஐ படம் போல நிகழ்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞர் பிஸ்வஜீத் மண்டல் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை தெற்குவாசல் எழுத்தாணிக்கார தெருவில் நண்பர்களோடு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள நகைப் பட்டறைகளில் நகை வடிவமைப்பாளராக இவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக தெற்குவாசலில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்கு சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர், விரல் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கட்டுப்போடவேண்டும் எனக் கூறி, இளைஞருக்கு கட்டுப் போட்டு சில மருந்துகளையும் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு பின்னர் கையில் போடப்பட்ட கட்டை அவிழ்த்த பிறகு உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இதனால் தெற்கு வாசலில் உள்ள AP தோல் சிகிச்சை மருத்துவரை இளைஞர் அணுகி உள்ளார். அங்கு அவருக்கு கொடுத்த மருந்தை உட்கொண்ட போது அவருக்கு மேலும் உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உள்ளன.

இதனை சரி செய்ய, நெல்பேட்டையில் உள்ள அருண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அணுகிய நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல பரிந்துரை செய்தனர்.

ஐ படத்தில் கதாநாயகன் போல உடல் முழுவதும் கரும் புண்ணாகக் காட்சியளித்த அவர், மேலமடையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞருக்கு எந்த மாதிரியான மருந்துகள் கொடுக்கப்பட்டன; அதில் எந்த மருந்தால் இப்படி பக்கவிளைவுகள் விளைவுகள் ஏற்பட்டன போன்ற விவரம் தெரியாததால் குழம்பிப்போயுள்ளார் அந்த இளைஞர்.

எலும்பு முறிவுக்கு மருந்து கொடுத்த மருத்துவரின் அலட்சியத்தால் இந்த அலங்கோலமான நிலை ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறார் பிஸ்வஜீத் மண்டல்.

மருத்துவ செலவுக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும், தற்போது வரையில் என்ன காரணத்திற்காக இந்த தோல் வியாதி வந்தது என்பது தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.

மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை வாங்கிச்சென்று மருத்துவரிடம் காண்பித்த பின்னரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள்,  சில குறிப்பிட்ட மருந்துகள் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை உடையவை என்றும், அவற்றை கவனமுடன் கையாளாவிட்டால் இந்த மாதிரி விபரீத சம்பவங்கள் அரங்கேறக் காரணமாகிவிடுகிறது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments