பெட்ரோல் பங்கில் பொங்கிய தம்பி... காரைவிட்டு கலக்கல்..! 45 லிட் டேங்கில் 47 லிட் எப்படி ?

0 26069
பெட்ரோல் பங்கில் பொங்கிய தம்பி... காரைவிட்டு கலக்கல்..! 45 லிட் டேங்கில் 47 லிட் எப்படி ?

காஞ்சிபுரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபோர்டு ஐகான் காருக்கு 47 லிட்டர் நிரப்பியதாக பில் கொடுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் ஒருவர், பங்க் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியைச் சேர்ந்தவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சால்டின் சாமுவேல். இவர் சங்குபாணி பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டேங்க் ததும்ப ததும்ப பெட்ரோல் போட்டுள்ளார்.

5 ஆயிரம் ரூபாய்க்கு 47 லிட்டர் பெட்ரோல் போட்டுள்ளதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் பில்லை நீட்ட, சால்டின் சாமுவேல் ஷாக்கானார், 45 லிட்டர் கொள்ளளவு மட்டுமே கொண்ட பெட்ரோல் டேங்கில் எப்படி 47 லிட்டர் பெட்ரோல் நிரப்ப முடியும் என்று நியாமான கேள்வியை எழுப்ப, பங்க் ஊழியர்களோ, பெட்ரோலுக்குரிய பணத்தை தராமல் இருப்பதற்காக பொய் சொல்கிறார் என்று எதிர் புகார் கூறினர்.

சுமார் 2 மணி நேரம் தனக்கு நியாயம் வேண்டும் என சால்டின் சாமுவேல் பொங்கிய நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் அழைப்பின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சால்டின் சாமுவேலை விசாரணைக்கு அழைத்தனர். மோசடியாக வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளரும் விசாரணைக்கு வரவேண்டும் என்று உரக்க குரல் கொடுத்ததால், அவரும் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிவகாஞ்சி போலீசார் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர், அப்போது தனது காரின் பெட்ரோல் டேங்க் முழு கொள்ளளவு 45 லிட்டர் எனவும் பெட்ரோல் போடுவதற்கு முன்பு 6 லிட்டர் அளவுக்கு பெட்ரோல் இருந்ததாகவும் தற்பொழுது மேலும் 47 லிட்டர் பெட்ரோல் எப்படி பிடித்திருக்கும் இதில் முறைகேடு இருப்பதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.

பெட்ரோல் பங்க் உரிமையாளரோ, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாமுவேல், கர்நாடகா பதிவு எண் கொண்ட கார் வைத்திருப்பதால் அவர் தமிழ்நாட்டில் அந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கான உரிமம் வைத்துள்ளாரா ? எனவும் பெட்ரோலுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக புதுப் புது காரணங்கள் கூறுவதாக எதிர்ப் புகார் அளித்தார். இருவரது புகார்கள் குறித்தும் விசாரித்து வரும் காவல்துறையினர் காரை காவல் நிலையத்தில் விட்டுச்செல்லும்படி கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments