ரூ.6683 கோடியில் கோவை மெட்ரோ: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளதாக பட்ஜெட்டில் தகவல்

0 1631

பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6683 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவையில் 44 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 11வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனைகளைக் குறிப்பிட்ட நிதியமைச்சர், எதிர்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கி ஐந்து ஆண்டுகளை அரசு பூர்த்தி செய்துள்ளது என்றார். 

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் 4 லட்சம் ரூபாயும், இயற்கையாக உயிரிழந்தால் 2 லட்சம் ரூபாயும் காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி ரூபாயும், விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு ஆயிரத்து 738 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் 3 கட்டத் திட்டத்தில் முதல் கட்ட திட்டம் 3140 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6683 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர், உயர்கல்வித்துறைக்கு 5 ஆயிரத்து 478 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

காவல்துறையை நவீனமயமாக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, காவல்துறைக்கு 9567 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6941 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு 22,218 கோடி ரூபாயும், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு 18,750 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க 3016 கோடி ரூபாயும்,
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியாக 3548 கோடி ரூபாயும், பிரதமரின் நகர்ப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு 3700 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் 2000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறைக்கு 623 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments