80 அடி உயர செல்போன் டவரில் சிக்கித் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்...போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

0 550

நாமக்கல் மாவட்டத்தில் 80 அடி உயரத் தனியார் செல்போன் டவர் மீது ஏறி , இறங்கத் தெரியாமல் சிக்கித் தவித்த, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

நேற்று இரவு மாரியப்பன் தனது வீட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் விழித்துப் பார்த்தபோது அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவர் மனைவி லட்சுமியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் , அக்கம் பக்கத்தில் இரவு முழுவதும் தேடியும் லட்சுமி கிடைக்கவில்லை.

இந்நிலையில், மறுநாள் காலை, மாரியப்பனின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுவர்கள் , வீட்டின் அருகே உள்ள செல்போன் டவர் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென டவரின் மீது பெண் ஒருவர் கதறி அழும் குரல் கேட்டது. இதனைக் கண்டு பயந்துபோன அந்த சிறுவர்கள், வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் டவரின் மீது தாங்கள் யாரையோ பார்த்ததாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்க்கும்போது, அந்த பெண், மாரியப்பனின் மனைவி லட்சுமி என்று தெரியவந்தது. இறங்க வழி தெரியாமல் 80 அடி டவரின் மீது லட்சுமி சிக்கித் தவிப்பதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக குமாரபாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சற்றும் தாமதிக்காமல், கோபுரத்தின் மேலே ஏறி, கயிறு மற்றும் தலைக்கவசத்தின் உதவியோடு லட்சுமியைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, எந்த அசம்பாவிதமும் இன்றி லட்சுமி உயிருடன் மீட்கப்பட்டார்.

மேலும், மீட்கப்பட்ட லட்சுமிக்குத் தண்ணீர் வழங்கிய தீயணைப்புத் துறையினர் , அவரை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments