”எவ்ளோ உயரம் என்கிறதெல்லாம் முக்கியமில்ல; எவ்ளோ உயர்றோம் என்கிறது தான் முக்கியம்” மெய்பித்துக்காட்டிய இளைஞர்!

0 1600

பிரபலமான ஒரு தமிழ் திரைப்படத்தில் "எவ்ளோ உயரம் என்கிறதெல்லாம் முக்கியமில்ல சார்... எவ்ளோ உயர்றோம் என்கிறது தான் முக்கியம்" என்று ஒரு வசனம் வரும். அந்த உயரத்தால் தனது லட்சிய கனவுகள் பறிபோன சூழ்நிலையிலும், சாதிக்க துடிக்கும் எத்தனையோ ஏழை இளைஞர்கள் வாழ்க்கையில் உயர ஏற்றி விடும் ஏணியாக அயராது உழைத்து வரும் ஆணழகன் பிரபாகரன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருச்சி மாவட்டம், திருச்செந்துறை பஞ்சாயத்து செந்தமிழ்புரம் கிராமத்தில் வசிப்பவர் பிரபாகரன். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் கலைநேசன், கலைவாணி என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்திய அளவில் ஆணழகன் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து பல வருடங்களாக பயிற்சி பெற்று முதன்முறையாக கடந்த 2005 ம் ஆண்டு மிஸ்டர் திருச்சி பட்டம் பெற்றார் பிராபகரன். 2006ம் ஆண்டு தென்னிந்திய ஆணழகன் போட்டியில் வெண்கலம் பதக்கமும், 2007ம் ஆண்டு அகில இந்திய ஆணழகன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து தனது விடாமுயற்சியால் 2008, 2009, 2010 ஆண்டுகளில் மிஸ்டர் தமிழ்நாடு தங்கம் பதக்கம் பெற்று திருச்சி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார் பிரபாகரன்.

 image

தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை மெருகேற்றி இந்திய அளவில் மற்றும் பல்வேறு ஆணழகன் போட்டியில் மேடையில் தோன்றி ஜொலித்து வெற்றி பெற்ற பிரபாகரனுக்கு காவல்துறை அல்லது ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால் உயரம் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக பிரபாகரனால் தான் விருப்பப்பட்ட பணியை மேற்கொள்ள முடியவில்லை. அதேநேரம் வயது மூப்பு காரணமாக ரெயில்வே துறையில் பணியாற்றும் வாய்ப்பு பறிபோனது.

தான் ஆசைப்பட்டது கிடைக்காத ஆதங்கம் ஒருபுறம் இருந்தாலும் தன்னை போன்று சாதிக்க துடிக்கும் எண்ணம் இருந்தும் அதற்கான சரியான பயிற்சிகள் கிடைக்காமல் ஏங்கும் கிராமத்து ஏழை, எளிய இளைஞர்களை அவர்கள் விரும்பிய பணிகளுக்கு செல்ல தேவையான பயிற்சியளிக்க எண்ணினார். அதற்காக முக்கொம்பு சுற்றுலா மையத்தில் காலை, மாலை இருவேளைகளிலும் தற்போது இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உடல்பயிற்சி, முன்கள பயிற்சி, கயிறு ஏறுதல், ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் என பல பயிற்சிகளை ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற பலரும் தேசிய மற்றும் இந்திய அளவில் ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். தொடர்ந்து இளைஞர்களுக்க பயிற்சி அளித்து காவல்துறையில் பணியமர்த்திவரும் பிரபாகரன் இதுவரை 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல் துறையில் சேர உறுதுணையாக இருந்துள்ளார்.

image

உடற்பயிற்சி கூடங்களில் பர்சனல் ஆலோசகராக பலருக்கு பயிற்சி அளித்து அதில் வரும் வருவாயைக் கொண்டு தன்னைப்போல உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு தேவையான புரதப் பொருட்கள், உடற்பயிற்சி சாதனங்களை எந்த எதிர்பார்ப்புமின்றி வாங்கி கொடுத்து வருகிறார். பொதுவாக உயரம் குறைவானவர்கள் பார்க்க அழகாக இருந்தாலும் கேலி கிண்டலுக்கு ஆளாவது வழக்கம். அதிலும் உயரம் காரணமாக தனது கனவுகளே பறிப்போனால் அப்படியே தேங்கி சோர்ந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உயரத்தால் தன் கனவு தகர்ந்த நிலையிலும் தன்னையே ஏணியாக்கி பல இளைஞர்கள் உயர்ந்து வாழ வழி செய்து வரும் பிரபாகரன் உண்மையில் ஆணழகனே!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments