இரிடிய கலசம் மோசடி.. பணத்தை திரும்ப பெற கடத்தி மிரட்டிய கும்பல்..!

0 5115

சென்னையில் போலி இரிடிய கலசத்தை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சினிமா புகைப்பட கலைஞரை கடத்தி பணம் கேட்ட ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இரிடிய மோசடி செய்ததாக கடத்தப்பட்ட நபரையும், அவரது நண்பரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சதுரங்க வேட்டை படத்தில் கோவில் கலசத்தை வைத்து ரைஸ்புல்லிங் வித்தை காண்பித்து, பல கோடிக்கு விற்பனை செய்து மோசடி செய்யும் காட்சி இடம் பெறும்.அதே போல மோசடி சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

சாலிகிராமம் வேலாயுதம் காலனியைச் சேர்ந்த கவுசல்யா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவரான புகைப்பட கலைஞர் நியூட்டனை காணவில்லை என கடந்த 19 ஆம் தேதி புகார் அளித்தார்.

தனது மாமனாருக்கு 19-ந் தேதி இரவு நியூட்டன் தனது செல்போனில் இருந்து அழைத்து தன்னை சிலர் கடத்தி வைத்திருப்பதாகவும் 30 லட்ச ரூபாய் கொடுத்தால் தன்னை விடுவிப்பார்கள் எனவும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவர தனிப்படை அமைக்கப்பட்டது.

மறுநாள் 20-ஆம் தேதி நியூட்டன் மீண்டும் தனது மாமனாரை அழைத்து குறிப்பிட்ட பகுதியில் பணத்தை கொடுக்க வேண்டும் என தெரிவிக்க, இதை எதிர்பார்த்து காத்திருந்த காவல்துறையினர், நியூட்டனின் மாமனாரிடம் டம்மி பணத் தாள்களை ஒரு பெட்டியில் வைத்து அனுப்பி, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஆனால் கடத்தல்காரர்கள், பணம் கொடுக்க வந்தவரை பல இடங்களுக்கும் சுற்றவிட்டு அலைக்கழித்துள்ளனர்.

பின்னர் பட்டாபிராம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பணம் வாங்க வந்த கௌதம் மற்றும் சுனில் ஆகியோரை மடக்க, சுனில் மட்டும் தப்பி சென்றுள்ளான். இதையடுத்து நியூட்டனின் மாமனாரை அழைத்த கடத்தல் கும்பல், போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் நியூட்டனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறை தனிப்படையினர் செல்போன் நெட்வொர்க் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடத்தல்காரர்கள் வந்த வாகனத்தை மடக்கி, நியூட்டனையும் அவருடன் கடத்தப்பட்ட அவரது நண்பர் ரகுஜி என்பவரையும் மீட்டு, கடத்திய 4 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரை சேர்ந்த மேத்யூ என்பவருடன் சேர்ந்து நியூட்டன் இரிடிய கலசம் இருப்பதாக கூறி, போலியான இரிடிய கலசத்தை காண்பித்து சுமார் 21 பேரிடம் 57 லட்சம் ரூபாயை பெற்று ஏமாற்றிய விவகாரம் தெரியவந்தது. பணம் தராமல் இழுதடிக்கவே, நியூட்டனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உடனிருந்த அவரது நண்பர் ரகுஜியையும் சேர்த்து காரில் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட போலி இரிடிய கலசத்தையும்,நியூட்டனிடம் இருந்து காவல் துறையினர் மீட்டனர்.

இரிடிய மோசடியில் ஈடுபட்டதால் நியூட்டன் அவரது நண்பர் ரகுஜி மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, பின்னணியில் உள்ள மோசடி கும்பலும் கைது செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments