நடிகைக்கு மிரட்டல்.. கல்லூரி உரிமையாளர் மீது வழக்கு..!

0 14233
சென்னையில் நடிகை வீட்டிற்குள் புகுந்து மிரட்டி, தாக்குதல் நடத்தி அவமதித்ததாக தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளர் உட்பட 8 பேர் மீது புழல் போலீசார் வழக்கு பதிவு

சென்னையில் நடிகை வீட்டிற்குள் புகுந்து மிரட்டி, தாக்குதல் நடத்தி அவமதித்ததாக தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளர் உட்பட 8 பேர் மீது புழல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புழல் அருகேயுள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 வயதான சமீரா, எதிராளி, வஜ்ரம், வென்று வருவான் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 17-ம் தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த நான்கு பெண்கள் உட்பட எட்டு பேர், நடிகை சமீரா மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவரது குடும்பத்தினரை அவமதித்ததாகவும் காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்படி இந்த விவகாரத்தை விசாரித்த புழல் போலீசார், செங்குன்றத்தில் செயல்படும் ஜெயசூர்யா பொறியியல் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ் தூண்டுதலால் இந்த மிரட்டல் சம்பவம் நடந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண் வன்கொடுமை, மிரட்டல், அத்துமீறி நுழைவது, காயப்படுத்துவது உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் "ஜெயசூர்யா பொறியியல் கல்லூரி" உரிமையாளர் கோவிந்தராஜ், ஜெயக்குமார், நக்கீரன், பூர்ணிமா உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"ஜெயசூர்யா பொறியியல் கல்லூரி" உரிமையாளரான கோவிந்தராஜ் கடந்த 2012 -ம் ஆண்டு சொந்தமாக ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு நடிகையாக சமீராவை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது மயக்க மருந்து கலந்துகொடுத்து, தன்னிடம் அத்துமீறியதாகவும் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டதாகவும் கூறுகிறார் நடிகை சமீரா.

அந்த வீடியோவை சமூக வலைதலங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியே தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் கூறுகிறார் சமீரா.

ஒரு கட்டத்தில் அவரது மிரட்டல்களுக்கு செவி சாய்க்காததால்,கோவிந்தராஜ் தன் மீது தாக்குதல் நடத்த ஆட்களை ஏவி விட்டுள்ளதாகவும் நடிகை சமீரா தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள "ஜெயசூர்யா பொறியியல் கல்லூரி" உரிமையாளர் கோவிந்தராஜை தொடர்பு கொண்டு அவர் தரப்பு விளக்கம் கேட்க முயன்ற போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இது குறித்து விசாரித்து வரும் புழல் போலீசார், நடிகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியபோது கையும், களவுமாக பிடிபட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நடிகைக்கும், கோவிந்தராஜூவுக்கும் என்ன முன் விரோதம் என்பதை இருதரப்பிலும் விசாரித்தால் தான் தெரிய வரும் எனவும் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments