எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா.. நாராயணசாமி அரசு தப்புமா ?

புதுச்சேரி சட்டபேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால், பேரவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளதால், பெருபான்மையை நிரூபிப்பதில் நாராயணசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் -திமுக கூட்டணி ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. காங்கிரசை சேர்ந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான் குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.
இதனையடுத்து, ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், இல்லையென்றால் பதவி விலக வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.
அதனை தொடர்ந்து, சட்டப்பேரவையை கூட்டி, நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை, நாராயணசாமி அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோரும் பதவி ராஜினமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 9ஆகவும், திமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 2 ஆகவும் குறைந்துள்ளது.
9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 திமுக எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என பேரவையில் இந்த கூட்டணியின் பலம் 12 ஆக இருக்கிறது.
நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Comments