காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

0 3763
காவிரி-வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக ஆறாயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிக் கால்வாய் வெட்டும் பணியைத் தொடக்கி வைத்தார்.

காவிரி - வைகை - குண்டாறு ஆகியவற்றை இணைப்பதன் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாகக் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் தொலைவுக்குக் கால்வாய் வெட்டும் திட்டம் ஆறாயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடைபெற்றது.

விழாவுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர்கர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாஸ்கரன், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், விவசாயிகளும் நூற்றுக்கு மேற்பட்ட டிராக்டர்களுடன் சென்று வரவேற்றனர். அதன்பின் விழா நடைபெறும் இடம் வரை டிராக்டரிலேயே அழைத்து வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் இருந்து விழா நடைபெறும் குன்னத்தூர் வரை செண்டை மேளம் முழங்க நாட்டுப் புறக் கலைஞர்களின் இசை நடனக் கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குன்னத்தூரில் நடைபெற்ற பூமிபூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுக் காவிரி - வெள்ளாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர். முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கொடியசைத்துக் கால்வாய் வெட்டும் பணியைத் தொடங்கி வைத்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் கால்வாய் வெட்டும் பணியைத் தொடங்கின.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நூறாண்டுக் கனவான இந்தத் திட்டத்தில் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் தொலைவுக்குக் கால்வாய் வெட்டப்பட உள்ளது.

இந்தக் கால்வாயின் நீர் கடத்தும் திறன் நொடிக்கு ஆறாயிரத்து 360 கன அடியாகும்.

இந்தக் கால்வாய் விராலிமலை, குளத்தூர், இலுப்பூர், புதுக்கோட்டை வட்டங்களின் 19 ஊராட்சிகளின் வழியாகச் செல்லும் என்பதால் மாவட்டத்தில் உள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குளங்களுக்கு நீர் கிடைக்கும்.

இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 ஆயிரம் எக்டேர் நிலம் பாசனம் பெறும்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரியாற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுப்பதற்கான நடந்தாய் வாழி காவேரி என்னும் பெயரில் தமிழக அரசு தெரிவித்த திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாகப் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நூறாண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை அதிமுக அரசு பத்தாண்டுகளில் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments