கடலூர் மற்றும் புதுச்சேரியில் விடிய விடிய கனமழை... வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்!
கடலூர் மற்றும் புதுச்சேரியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் தெருக்கள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மகக்ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஸ்கூட்டியுடன் பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிய கனமழை 19 செண்ட்டி மீட்டராகப் பதிவானது.
நகரப் பகுதிகளான கோரிமேடு புதிய பேருந்து நிலையம், காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கிராம பகுதிகளான பாகூர் வில்லியனூர் அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து, முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. வீட்டு உபயோகப் பொருட்களும் நீரில் மூழ்கியதால் குடியிருப்புவாசிகள் அவதிக்கு உள்ளாகினர்.
சண்முகாபுரம் பகுதியில் உள்ள வெள்ளவாரி ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், மீன் மார்க்கெட் அருகே ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரை தீயணைப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோட்டகுப்பம், கூனிமேடு, பிள்ளைச்சாவடி, கந்தாடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
Comments