ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் தொடர் போராட்டம்: கலவர பூமியாக மாறிய மியான்மர்!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மியான்மர் நாட்டில் தேர்தல் முறைகேடு காரணமாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றியிருப்பதால், அந்நாட்டு மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.தினந்தோறும் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு ராணுவ ஆட்சிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாண்டேலா நகரில் நடந்த போராட்டத்தில் மக்கள் ராணுவ ஆட்சியை கண்டித்தும், ஆங் சான் சூகியை விடுதலை செய்யக் கோரியும் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ராணுவ வீரர்கள் மீது பட்டாசுகளை வீசியும், கையில் கிடைத்தவைகளை கொண்டு எறிந்து உள்ளனர்.
இதையடுத்து ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் கப்பல் தள பகுதியை சேர்ந்த இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராணுவ வீரர்களின் வெறிச் செயலால் மாண்டேல நகர சாலைகள் கலவர பூமிபோல் காட்சி அளித்தன. ஏற்கனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கூடுதல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments