தாய்மொழி தின கொண்டாட்டம் ; உலக மொழிகளுள் மூத்தமொழி தமிழே!

0 7878

1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21, உலக தாய்மொழி நாளாக அறிவித்தது, ஐ.நா. மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலும் மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பன்மொழி வழிக் கல்விக்காகவும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழிப் போரானது மேற்கு பாகிஸ்தானிலும் தமிழகத்திலும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருப்பது தாய்தான். மொழியும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. அதனால்தான், அவற்றை தாய்மொழி என்கிறோம். உலகளவில் மொழிரீதியான பன்மைத்துவத்தை விவரிக்கும்போது, வேறெந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உண்டு. 

உலகில் 6000மொழிகள் தோன்றின என்பதும் அவற்றுள் 2700மொழிகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்பதும் வரலாற்றுச் சான்றாகும். அவற்றுள் தமிழ்மொழி மிகவும் தொன்மையானது என்பதை தனது படைப்புகள் மூலம் உணர்த்தியவர்தான், மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.

இவர் நம் தாய்மொழியான தமிழ்மொழியை உயர்த்துவதற்காகவே அவதாரம் எடுத்து வந்தவர் என்றால் அது மிகையாகாது! அந்தளவிற்கு தமிழின் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங்கினார்.

உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத வகையில், தமிழ்மொழிக்கு மட்டும் 16சிறப்புகள் உள்ளன. அவை, ”தொன்மை, இயன்மை, தூய்மை, தாய்மை, முன்மை, வியன்மை, வளமை, மறைமை, எண்மை, இளமை, இனிமை, தனிமை, ஒண்மை, இறைமை, அம்மை, செம்மை ஆகியனவாகும். அவற்றை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தவர் பாவாணர் ஆவார்.

’ஒப்பியல் மொழி’ எனும் நூலில் தொல்காப்பியர் கால தமிழ் நூல்களும் கலைகளும் என்ற பகுதியில் இலக்கணம் பற்றி அவர் கூறும் கருத்தானது, கருத்தாழமிக்கது மட்டுமல்ல ; தமிழை தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

பிறமொழி இலக்கணங்களில் எல்லாம் எழுத்து, சொல், யாப்பு என இலக்கணத்தை மூன்றாக பகுப்பதே பண்டைய வழக்கம். யாப்பும் அணியும் ஒரு செய்யுளின் பொருளை உணர்த்தும் கருவிகள் ஆகும். அவற்றை பொருள் இலக்கணத்தில் இருந்து பிரிக்கக்கூடாது என்பது தமிழ்ச் சான்றோர்களின் கருத்தாகும்.

பண்டைத் தமிழர் மதிநுட்பமெல்லாம் பழுத்துக்கிடப்பது பொருள் இலக்கணம் ஒன்றில்தான். மக்களின் நாகரிகத்தை காட்ட சிறந்த அடையாளமாகப் பார்க்கப்படுவது அவர்கள் பேசும் மொழிதான் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டது.

பல கருத்துகளையும் தெரிவிப்பதற்குரிய சொற்களும், சொல் வடிவங்களும், விரிவான இலக்கியமும் ஒரு மொழியின் சிறப்பைக்காட்டும். இலக்கியத்திலும் இலக்கணம் சிறந்தது என்பதை தமிழ் மொழியில் மட்டுமே காண முடியும்.

உலக மொழிகளுள் தொன்மையானது தமிழ் ; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ் ; திராவிட மொழிகளுக்குத் தாய் தமிழ் ; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் பழந்தமிழ் நாகரிகமே என்பது பாவாணர் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த அரிய தகவலாகும்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதான மொழி உலகில் வேறெங்கும் இல்லை” என்றார் பன்மொழி கற்ற நம் பாரதி.

“தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.

உலகெங்கும் வாழும் மக்கள் பல்வேறு மொழிகளை பேசி வருகின்றனர். ஆயினும் அவரவருக்கு அவர்களது தாய்மொழியே சிறந்ததாகும் ; உயர்ந்ததாகும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

அதேவேளையில், “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி” என்று அந்நாளில் பாரதிதாசன் தமிழின் சிறப்புகளைப் சிறப்புற பாடிவைத்தார்.

“உலக மொழிகளுள் ; தமிழே மூத்தமொழி” என்பதை தனது ஆய்வுப்புலத்தின் மூலம் நிரூபணம் செய்தார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். அவற்றை மேலும் மேலும் வலுசேர்க்கும் வகையில் கீழடி அகழ்வாராய்ச்சியும் மெய்ப்பித்துக்கொண்டு இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வாழ்ந்தான் என்பதற்கும் தமிழே மூத்தகுடி என்பதற்கும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியே தக்கச் சான்றாகும்.

உலக தாய்மொழி தினத்தில் மூத்தமொழியாக விளங்கும் செம்மொழியான நம் தமிழ்மொழி இறவா வரம்பெற்று வாழிய வாழியவே…

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments