காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம்.! தேசிய திட்டமாக அறிவிக்க கோரிக்கை.!

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை, தேசிய நதிநீர் இணைப்புத் திட்டமாக அறிவிக்க வேண்டும் என, பிரதமரை, முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற, 6ஆவது நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில், காணொலி முறை மூலம் பங்கேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, ஆளும் அதிமுக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள், எதிர்கால திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.
கங்கையை தூய்மைப்படுத்தி பாதுகாக்கும், நமாமி கங்கை திட்டம் போன்று, காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை தூய்மைப்படுத்தி பாதுகாக்கும் தமிழ்நாடு அரசின், நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவிலேயே நல்ல நிர்வாகத்தை தரும் மாநிலங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில், தமிழ்நாடு முதலிடம் பிடித்து, விருது பெற்றிருப்பதை, முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1,418 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குளம், ஏரி, கால்வாய் உள்ளிட்ட 6,211 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை, தேசிய நதிநீர் இணைப்புத் திட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், பிரதமரை, முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தகவல் பகுப்பாய்வு திட்டம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான மையம் ஒன்றையும், தமிழ்நாடு அரசு கட்டமைத்துள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
Comments