'இந்த டிசைன் புடிக்கல வேற காட்டுங்க' - தலைகாணி வாங்க வந்த களவாணி !

0 4063

தூத்துக்குடி அருகே  ஜவுளிக்கடையில், தலைகாணி வாங்குவது போல் கல்லாவில் இருந்த பணத்தை களவாடியவரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தர்மராஜ் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். காலை 9 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டிப்டாப் உடையணிந்து தர்மராஜின் கடைக்கு வந்துள்ளார். அவர், தர்மராஜிடம், தான் தலைகாணி வாங்கவந்ததாகவும், படுத்தவுடன் தூக்கம் வருவது போல ஒரு தலைகாணி தருமாறும் கேட்டுள்ளார். உரிமையாளர் தர்மராஜ், கடையிலுள்ள  அத்தனை தலையணைகளையும் காண்பித்துள்ளார். ஆனால் அதில் திருப்தி அடையாத நபர், தனக்கு தலைகாணியில் உள்ள டிசைன் பிடிக்கவில்லை என்றும் , இன்னும் கொஞ்சம் கலர்ஃபுல்லா காட்டுங்க என தர்மராஜிடம் கூறியுள்ளார்.

தர்மராஜ், வாடிக்கையாளரை 5 நிமிஷம் வெயிட்  பண்ணுங்க சார் , நீங்க கேக்குற மாதிரி தலகாணி  குடோன்ல  இருக்கு, கொண்டு வந்து காட்டுறேன் என்று கூறி விட்டு எடுத்து வர சென்றார்.  அப்போது, கடையில் தனியாக இருந்த டிப்டாப் ஆசாமி, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ, 10,000  பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார். 

தர்மராஜ், குடோனில் இருந்த எல்லா தலைகாணிகளையும் கொண்டு வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த கஸ்டமரையும் காணவில்லை  கல்லாப்பெட்டியில் இருந்த காசையும் காணவில்லை என்பதை கண்டு அதிர்ந்து போனார். இது  குறித்து நாசரேத் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தலைகாணி என்ற பெயரில் கொள்ளையடித்து சென்ற களவாணியை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments