ஏ.கே.47 துப்பாக்கியால் முதுகில் சுட்ட தீவிரவாதி... இரண்டு போலீசார் வீர மரணம் - பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி!

0 33583

காஷ்மீரில் போலீசார் கடையில் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன், பின்பக்கமாகவந்து திடீரென்று துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு போலீசார் மரணமடைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

காஷ்மீரில், ஸ்ரீ நகர் மாவட்டத்தின் பகத் - பர்சுல்லா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு கடைக்கு முன்பு நின்றுகொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வேளையில், அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியுடன் அங்கு வந்தான். கடைக்கு முன் நின்று பேசிக்கொண்டிருந்த போலீசார் மீது சரமாரியாக சுட்டுவிடு அங்கிருந்து தப்பிச் சென்றான். இந்தத் தாக்குதலில் இரண்டு போலீசார் குண்டடிபட்டு, நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் தீவிரவாதியின் தாக்குதல் அப்படியே பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியை ஆராய்ந்த போலீசார் இது லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த போலீசாரின் பெயர்கள் முகமது யூசுப் மற்றும் சுஹைல் அகமது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்துக்குத் துணையாக இருப்போம் என்றும் ஸ்ரீநகர் பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதுகில் சுட்ட தீவிரவாதிகளின் இந்தக் கொடூர சம்பவத்துக்குப் பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, “வன்முறையால் எதுவும் நிகழப் போவதில்லை. துயரத்தை மட்டுமே ஏற்படுத்தும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments