கல்குவாரிகளால் சோற்றில் மண் விழுகின்றது..! கிராம மக்கள் வேதனை

0 2910
கல்குவாரிகளால் சோற்றில் மண் விழுகின்றது..! கிராம மக்கள் வேதனை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசின் விதிமுறையை மீறி செயல்படும் நூற்றுக்கணகான கல்குவாரிகளால் தங்கள் கிராமமே புழுதிக்காடானதால் உண்ணும் உணவில் மண் விழுவதாக மக்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த இச்சிபட்டி, கோடங்கிபாளையம், கொத்துமுட்டிபாளையம், பெருமாள்பாளையம், காரணம்பேட்டை ஆகிய கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளது.

இந்த கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவுக்கு மீறி வெடி வைத்து ஆழமாக கற்களை உடைத்து நாள் ஒன்றுக்கு நூற்றுகணக்கான லாரிகளில் கல் எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும் லாரிகளில் அளவுகதிமாக கல் பாரம் ஏற்றிச் செல்வதால் சாலை சேதமடைந்தும், கற்கள் கீழே விழுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கற்கள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கிரால் விழுந்து சேதமடைவதாகவும் நாள் ஒன்றுக்கு நூற்றுகணக்கான லாரிகள் கிராமத்திற்குள் செல்வதால் கோடங்கிபாளையம் பகுதியே புழுதி காடாக காட்சியளிக்கிறது.

வீடு மற்றும் விவசாய விளை பொருட்கள் அனைத்தும் மண் படர்ந்து காணப்படுவதால் விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் உண்டாகிறது. உயிர்வாழ உண்ணும் உணவில் கூட இந்த புழுதி மண் கலந்து விடுவது தான், வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகின்றது.

இந்த புழுதியின் காரணமாக இங்குள்ள மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு உடல்நல கோளாறால் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கல்குவாரிகளிலிருந்து கொட்டப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்து, விவசாய நிலங்கள் மலடாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையிலும் இப்பகுதியில் மேலும் புது கல்குவாரிகளை அமைப்பதற்கு ஒரு சிலர் அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஆணையின்படி, ஆட்சேபணைக்கைகுரிய இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில்தான் கல்குவாரி அமைக்க வேண்டும். ஆனால் புதியதாக அமையவுள்ள கல்குவாரிகள், குடியிருப்பு மற்றும் விளைநிலங்களிலிருந்து 150 மீட்டர் தொலைவிலேயே அமைய உள்ளதால் தங்கள் இயல்பு வாழ்க்கை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் என அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

அதே நேரத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்காமல், குவாரி அமைக்க அனுமதி கேட்டிருந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்களை வைத்து எதிர்ப்பு இன்றி சுமூகமாக கூட்டம் நடத்தி முடித்ததாக இந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்

 ஏற்கனவே உள்ள கல்குவாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யாமல், புதிய கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ள கோடங்கி பாளையம் மக்கள், அரசு தங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments