சேலத்தில் சோகம் : 'பைத்தியமாப்பா நீ' என்று கேட்ட மகள் கொலை... தந்தையும் உயிரை மாய்த்த பரிதாபம்!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மகளை சுத்தியலால் அடித்துக் கொலை செய்து விட்டு தந்தையும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள் விளையாட்டுத்தனமாக கூறிய வார்த்தை விபரீதத்தில் முடிந்தது.
எடப்பாடி அருகே ஆதிகாட்டூரைச் சேர்ந்த கோபால் - மணி தம்பதிக்கு ரமேஷ் கண்ணா என்ற மகனும், பிரியங்கா என்ற மகளும் இருந்தனர். மனநலம்பாதிக்கப்பட்டு, 6 மாதத்திற்கு முன் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த கோபால், ஊரில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். ரமேஷ் கண்ணா பாட்டி வீட்டில் தங்கி பேக்கரிக்கு பணிக்கு சென்று வந்த நிலையில், மனைவி மணியும் அடிக்கடி கரும்பு வெட்டும் தொழிலுக்காக வெளியூர் சென்று விடுவார். இதனால், பெரும்பாலும் கோபாலும் அவரது 15 வயது மகள் பிரியங்காவும் மட்டுமே வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
அவ்வபோது மனநலம் பாதிப்பிற்குள்ளாகும் கோபாலை கிராமத்தினர் சிலர் கிறுக்கன் என அழைத்து கிண்டலடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, எதேச்சியாக பிரியங்கா, கிறுக்கன் எனக்கூறவே, அந்த கொடூரச் செயலை நிகழ்த்தியுள்ளார்.
ஊரே கிண்டல் செய்யும் வார்த்தையை பெற்ற மகளும் கூறியதால், பொருத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த கோபால், மகளை தரதரவென இழுத்துச் சென்று, சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொடூரத்தை அரங்கேற்றிட்டு, தானே தம்பியை செல்போனில் அழைத்து மகளை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார் கோபால்.
இதனை தம்பி குடும்பத்தினர் நம்பாத நிலையில், பிளேடால் கழுத்தைக் கீறிக் கொண்டு நேரடியாக தம்பி வீட்டுக்கேச் சென்ற கோபால், அங்கிருந்து அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
பிரியங்கா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடைப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கோபாலை திட்டி தீர்த்துள்ளனர். இதனையடுத்து, மகளை கொலை செய்துவிட்டதை உணர்ந்து, யாருக்கும் தெரியாமல் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து கோபால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி போலீசார், தந்தை, மகள் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments