தமிழ் தாத்தாவிடம் கல்விக் கற்க விரும்பிய காந்தி தாத்தா!

0 1786
தமிழ் தாத்தாவிடம் கல்விக் கற்க விரும்பிய காந்தி தாத்தா!

தேசப் பிதா காந்தி என்றால் ; தமிழ்ப் பிதா உ.வே.சா. ஆவார். இது வெறும் வார்த்தையின் வர்ணனை அல்ல ; வாழ்வியல் உண்மையும்கூட.

“நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட மாபெரும் தலைவர் மகாத்மாவுக்கு எப்படி தேசப் பிதா என்ற அடைமொழி பொருந்துமோ, அதுபோல தமிழ் மொழிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த உ.வே.சா.வுக்கு தமிழ்ப் பிதா என்ற அடைமொழி மிகவும் பொருந்தும். அவற்றை தமிழ் உலகமும் ஏற்றுக்கொண்டது.

 ஏனெனில், தமிழ் மொழியான நம் தாய் மொழியானது, ஓலைச் சுவடிகள் மூலமே பாதுகாக்கப்பட்டு வந்தது. அவற்றை எழுத்து வடிவமாக்கி, அச்சில் ஏற்றுவதற்கு அடிநாதமாக விளங்கியவர் உ.வே.சாமிநாதையர் ஆவார்.

1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று சென்னை திருவல்லிக்கேணியில் இந்திய இலக்கிய தமிழ் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மூதறிஞர் ராசாசி, எழுத்தவதாரர் கல்கி ஆகியோர் முன்னின்று கவனித்து வந்தனர். இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்க மகாத்மா காந்தியை அணுகினர். அவரும் அதற்கு சம்மதித்தார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்ற எண்ணிய மாநாட்டு குழுவினர், வரவேற்புக் குழுத் தலைவராக உ,வே,சா. வை நியமித்தனர். மாநாடு குறிப்பிட்ட தேதியில் தங்குத் தடையின்றி நடைபெற்றது. முதுபெரும் தமிழ்ப் புலவர்கள் எல்லாம் அம்மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்தனர்.

அந்த மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய உ.வே.சா., “தமிழின் பழமை, சங்க கால இலக்கியத்தின் பெருமை, வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் உலகளாவிய பெருமைக்கு வித்திட்டது” என்று தமிழுக்குப் புகழாரம் சூட்டினார். தமிழில் உரையாற்றிய இந்த வரவேற்புரையை ஹரிஹர சர்மா என்பவர் மகாத்மாவுக்காக இந்தியில் மொழிபெயர்த்தார்.

உலகின் மூத்தமொழியான தமிழின் அருமை பெருமைகளை காந்தியும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மாநாட்டு நிகழ்வில், தமிழறிஞரான உ.வே.சா. வுக்கு ‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டத்தை கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி சூட்டினார்.

வரவேற்புரை முடிந்ததும் தமிழ்த் தாத்தா உ.வே.சா. விடம், “தங்கள் திருவடியின் கீழ் அமர்ந்து தமிழ் கற்க வேண்டும் என்கிற ஆசை  என்னுள் பீறிட்டு எழுகிறது” என்றார் காந்தி தாத்தா. மகாத்மா காந்தியைவிட (1869) உ.வே.சா. 13வயது மூத்தவர்  (1855) என்பது குறிப்பிடத்தக்கது.

ஏட்டு சுவடிகளை அச்சில் ஏற்றி எழுத்தாக்குவதற்கு உ.வே.சா. விற்கு  தமிழகத்திலுள்ள திருவாவதுறை ஆதினம், தருமபுரம் ஆதினம் உட்பட சைவ சித்தாந்தத்தைப் பின்பிற்றிவந்த பிற ஆதினங்களும் ஓலை சுவடிகளை கொடுத்து உதவின.

ஆயினும் அந்த காலத்தில் போக்குவரத்து வசதி வாய்ப்புகள் என்பது அரிதான ஒன்று. அந்த நிலையிலும் தமிழகத்திலுள்ள திருநெல்வேலி, திருவைகுண்டம் தஞ்சாவூர் உட்பட பெரும்பாலான பகுதிகளுக்கு கால் கடுக்க கால்நடையாகவே நடந்துசென்று ஓலை சுவடிகளை சேகரித்தார் உ.வே.சா.

அவர் தனது இளமைப் பருவத்திலேயே நூற்பதிப்பு தொண்டை தொடங்கிவிட்டார். பழைய நூலைத் தேடி பதிப்பிக்கும் முயற்சியை 1887ஆம் ஆண்டில் மேற்கொண்டாலும், அதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய முதல் வெளியீடு பிரசுரமாயிற்று.

திருவாவதுறை ஆதினத்தில் இருந்து மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவனாக இருந்து உ.வே.சா. தமிழ் கற்கும் காலத்தில், அதாவது, 1878 ஆம் ஆண்டில், ‘வேணுவன லிங்க விலாசச் சிறப்பு’ என்ற நூலை அச்சில் ஏற்றினார். அதில் பல வித்துவான்களுடைய பாடல்கள் அடங்கியுள்ளன. அதன்பின் 1883ஆம் ஆண்டு திருக்குடந்தை புராணம் அவரது முயற்சியால் வெளியிடப்பட்டது.

தமிழுக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த மேதையான உ.வே.சாமிநாதையரைப் பாராட்டி மாநில கல்லூரியில் ஒரு விழா  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மகாகவி பாரதி,உ.வே.சாமிநாதையர் தமிழுக்கு ஆற்றிய அரிய தொண்டிணை வாழ்த்தி பாடலாகப் பாடினார்.

உ.வே.சா. கருத்தாழத்தோடு பேசக்கூடியவர். அவரது பேச்சில்  நகைச்சுவை இழையோடும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவானது, ‘சங்ககாலத் தமிழும்’, ‘பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

தமிழுக்கும் இலக்கியத்துக்கும் உ. வே. சா ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி 1932ஆண்டு மார்ச் 21ஆம் தேதியன்று சென்னைப் பல்கலைக்கழகம், ‘மதிப்புறு முனைவர்’ என்கிற பட்டத்தை அளித்து அவரை கௌரவித்தது.

இது தவிர, ‘மகாமகோபாத்தியாய’ மற்றும் ‘தட்சிண கலாநிதி’ எனும் பட்டமும் அவரை அலங்கரித்தது. நடுவண் அரசு 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் நாள் இவரது நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

கும்பக்கோணம் அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.  அவர் சென்னை மாநில கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியதால் திருவல்லிக்கேணியிலுள்ள திருவேட்டீஸ்வரன் பேட்டையில் குடும்பத்தோடு வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1942ஆம் ஆண்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள வசந்த நகரில் டாக்டர் உ. வே. சா  பெயரில் நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இவர் பதிப்பித்த நூலகள் பல வகைப்படும். அவற்றில் சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, ஒன்பது உலா நூல்கள், ஆறு தூது நூல்கள், மூன்று வெண்பா நூல்கள், நான்‘கு அந்தாதி நூல்கள், இரண்டு பரணி நூல்கள், இரண்டு மும்மணிக்கோவை நூல்கள், இரண்டு இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள்  நான்கு என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் பிறந்த உ.வே.சா.,  தமிழுக்கு ஆற்றிய அரிய தொண்டும் அளப்பரிய சேவையும் அளவிற்கரியதாகும். அதன் மூலம் உலகமுள்ள வரை உ,வே.சா. வின் புகழும் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments