புதுச்சேரியில் 22 ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் -ஆளுநர் தமிழிசை உத்தரவு

0 2798
புதுச்சேரியில் 22 ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான அரசு வரும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரி காங்கிரஸ் -திமுக கூட்டணி ஆனது 2016 ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. கடந்த வருடம் பாகூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து அமைச்சராக இருந்த நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான், ஏனாம் தொகுதி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ், காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான் குமாரும் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்தது. 3 திமுக எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயச்சை எம்எல்ஏ என பேரவையில் கூட்டணியின் பலம் 14 ஆக சரிந்தது.

இதேபோன்று எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என மொத்தம் 14 பேர் உள்ளனர்.

ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ஒரே எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்ததால் அரசு பெரும்பான்மை இழந்ததாக கூறிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் பொறுப்பு ஏற்றுள்ள தமிழிசையிடம் மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமியை அழைத்துப் பேசிய, தமிழிசை தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவருடனும் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை முதலமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி மேற்கொள்ளவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments