ஓய்வுபெற்ற மருத்துவர் மனைவியிடம் ரூ.1.82 லட்சம் மோசடி... தொலைபேசியில் தொடர்புகொண்டு பணம் பறித்த மர்மநபர்

0 3184

சென்னையில் ஒய்வு பெற்ற மருத்துவரின் மனைவியிடம் வங்கியின் மேலாளர் என தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட அரை மணி நேரத்தில் 1.82 லட்சம் பணம் நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் சிட்லாபாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் சேர்ந்தவர் மருத்துவர் கண்ணன். இவர் தனது மனைவி சியாமளாவுடன் ஐட்ஜ் காலனி 3வது தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சியாமளாவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் தன்னை விஜயகுமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர், சியாமளா கணக்கு வைத்திருக்கும் இந்தியன் வங்கியின் மேலாளர் எனக் கூறியுள்ளார். வங்கியின் மேலாளர் எதற்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அழைத்தவரிடம் தனது சந்தேக கேள்வியை எழுப்பியுள்ளார் சியாமளா. உடனடியாக வங்கியின் மேலாளர் என பேசிய நபர், தங்கள் வங்கி கணக்கிற்கு பிரதமர் மோடியின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த திட்டங்கள் மூலமாக உங்களுக்கு பெருந்தொகை கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்த மோசடி நபர், சியாமளாவின் வங்கி கணக்குகளின் முழு விவரங்களை கேட்டுள்ளார். அப்பொழுது சியாமலா தனது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் இந்தியன் வங்கியில் வேலை புரிபவர் என்றும், நீங்கள் சொல்வது ஒன்றும் புரியாததால் அவரை அழைக்கின்றேன் எனக் கூறி உள்ளார். ஆனால் அந்த மோசடி நபர் யாரையும் அழைக்க வேண்டாம். நான் உங்களது ஏடிஎம் பின் நம்பரை கூறுகிறேன் அப்பொழுது என்னை நம்புவீர்கள் எனக் கூறி உள்ளார். அதன்பின் மோசடி நபர் சியாமளா வங்கி கணக்கின் பின் நம்பரை கூற, சியாமளா தான் ஏமாற போவதை அறியாமல் தனது வங்கி கணக்கில் முழு விவரத்தை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பும் கட் செய்யப்பட்டது.

முழு விபரம் கொடுக்கப்பட்டு கால் கட் செய்யப்பட்ட அடுத்த அரை மணி நேரத்தில் சியாமளாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.1,82,000 பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத சியாமளா அதிர்ச்சிக்குள்ளானார். மேலும் இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கூறி அவர்களின் உதவியுடன் சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சிட்லபாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவத்தைப் பற்றி வங்கியின் கிளை மேலாளரிடம் கேட்ட பொழுது இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது எனவும் யாரும் தங்களது வங்கிக் கணக்கின் முழு விபரங்களையும் போன் மூலமாக யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments