பச்சிளங்குழந்தை கொடூரக் கொலை... சந்தேகத்தால் நடந்த விபரீதம்

0 14584
பச்சிளங்குழந்தை கொடூரக் கொலை... சந்தேகத்தால் விளைந்த விபரீதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, பிறந்து 8 நாளே ஆன பச்சிளங்குழந்தையை தரையில் தூக்கி அடித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். சந்தேகம் எனும் கொடிய நோயால் புத்தி மழுங்கிய கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் - சிவரஞ்சனி தம்பதிக்கு ஒரு வாரத்திற்கு முன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பார்த்த தந்தை ராஜீவ், குழந்தை தனது முகச்சாயலில் இல்லை என்றும், குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறிவிட்டு மருத்துவமனையில் இருந்து சென்றுள்ளான். அதற்கு பிறகு, மருத்துவமனையில் இருந்த சிவரஞ்சனியை ராஜீவ் வந்து பார்க்கக்கூட இல்லை எனக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து சிவரஞ்சனி தாய் வீட்டுக்கு திரும்பியவுடன் அங்கு சென்ற ராஜீவ் நல்லவன் போல் பாவனை செய்து நடித்து அனைவரையும் நம்ப வைத்துள்ளான். நேற்றிரவு, குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த சிவரஞ்சனியிடம், குழந்தையை தாம் பார்த்துக் கொள்வதாக கூறி வாங்கியுள்ளான்.

சிவரஞ்சனியும் கணவன் ராஜீவை நம்பி குழந்தையை கொடுத்துவிட்டு, அசதியில் உறங்கியுள்ளார். இதனை சாதகமாக்கிக் கொண்ட கொடூரன் ராஜீவ், மின் விளக்கை அணைத்துவிட்டு, குழந்தையின் தொப்புள் கொடியை பிடித்து இழுத்து, தரையில் தூக்கி அடித்தோடு, கழுத்தை நெறித்துக் கொலை செய்தாக அவனே போலீசில் வாக்குமூலமாகஅளித்துள்ளான்.

தூக்கம் தெளிந்து பார்த்த போது, குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சிவரஞ்சனி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஒரத்தூர் போலீசார், கொடூரன் ராஜீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகம் எந்த ஒரு மனிதனையும் கொடியவனாக மாற்றிவிடும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கிறது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments