என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்..? ஓசியில் கிடைத்தால் இப்படித்தான்..!
அரசியல் கட்சியினர் தங்கள் தலைவர்களை வரவேற்று தோரணமாக கட்டி இருக்கும் பயிர்வகைகளை நிகழ்ச்சி முடிந்ததும் அங்குள்ள மக்கள், போட்டிபோட்டு அடித்து பிடித்து அள்ளிச்செல்வதை வழக்கமாக்கி வருகின்றனர்.
இதனை பார்த்து எதோ பொங்கல் சிறப்பு விற்பனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று நினைத்து விடாதீர்கள்..! தூத்துக்குடியில் முதல் அமைச்சரை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பிரண்மாண்ட வாழைத்தோப்பு மற்றும் கரும்பு தோரணத்தை கூட்டம் முடிந்ததும் வேட்டையாடும் உற்சாக நிகழ்வு தான் இது..!
வரவேற்று வரிசையாக கட்டப்பட்டிருந்த கரும்புகளை சிலர் பிடுங்கிச்செல்ல, பலம் வாய்ந்தவர்கள் கரும்புகளை கட்டாக பெயர்த்து எடுத்து கையோடு கொண்டு சென்றனர்
பொங்கலுக்கு வாங்கிய கரும்பையே சுவைக்காதவர்கள் , வீதியில் கட்டிய செங்கரும்புக்காக எறும்புகளை போல ஒருவருக்கொருவர் இழுத்துக் கொள்ளும் சம்பவம் அரங்கேறியது
கரும்பு காலியானதும், கூட்டத்தினரின் பார்வை வாழைத்தார்கள் மீது பட இழுத்த வேகத்தில் கையோடு வந்த வாழைத்தார்களை அங்கிருந்த மக்கள் பறித்துச்சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் குலை தள்ளிய வாழைமரங்கள் மொட்டையடிக்கப்பட்டது. கூட்டத்தினர் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்து போலீசார் கலைந்து போகச்சொன்னாலும் அசராமல் சிலர் வாழைக்குலைகளை பறிப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர்
தோரணவாயிலில் கட்டப்பட்டிருந்த செவ்விளநீர்க் குலையையும் விடாமல் தாவிச்சென்று பறித்து வீசினர் சில இளைஞர்கள்
இதே போல மதுரையில் திமுக தலைவரை வரவேற்று அமைக்கப்பட்ட கரும்பு தோரணத்தை, அங்கு வந்தவர்கள் கட்டுக் கட்டாக முறித்து அள்ளிச்சென்றனர்
சந்தை போல காட்சியளித்த அந்த பகுதியில் ஆண்களும் பெண்களும் ஏதோ அதிசய பொருள் கிடைத்திருப்பது போல தங்கள் கைகளால் எவ்வளவு அள்ளமுடியுமோ அந்த அளவிற்கு வாரிச்சென்றனர்
அதே போல வாழைமரங்கள் எல்லாம் வேகமாக மொட்டையாக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தின் ஹைலைட் என்னவென்றால் அங்கிருந்த பலூன்களை கூட விட்டுவைக்காமல் 3 இளைஞர்கள் அதனை எடுத்துச்செல்ல கம்பத்தில் ஏறி போராடிக் கொண்டிருந்தனர்.
ஓசியில் கிடைத்தால் நம்ம மக்களுக்கு உற்சாகம் எப்போதும் கரைபுரண்டு ஓடும்..! என்பதைக் காட்டுவதாக அமைந்திருந்தன இந்தக் காட்சிகள்..
Comments