ரியலில் பாட்ஷாவாக முயற்சி என்கவுண்டரால் முற்றுபுள்ளி..! கஞ்சா கும்பல் அலம்பல்

0 6587
ரியலில் பாட்ஷாவாக முயற்சி என்கவுண்டரால் முற்றுபுள்ளி..! கஞ்சா கும்பல் அலம்பல்

கடலூரில் 5 ஆண்டுகள் கழித்து, நண்பன் கொலைக்கு பழிக்கு பழியாக, பிரபல ரவுடியை கொலை செய்து தலையை பந்து போல உருட்டிச்சென்றவன், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பாதிரிப்புலியூர் அருகே சுப்புராயலு நகரை சேர்ந்தவன் பிரபல ரவுடி வீரா. கடலூர் உழவர் சந்தையில் பழக்கடை நடந்தி வந்த இவன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. செவ்வாய்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த வீராவை, பைக்கில் பின் தொடர்ந்து சென்ற 10 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளது.

ஆத்திரம் தீராத அந்த கும்பல், வீராவின் தலையை துண்டித்து கையோடு எடுத்துக் கொண்டு தப்பிவிட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை துவங்கினர்.

தொடர்ந்து இரவு முழுவதும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், கொலை கும்பலை சேர்ந்த 6 பேர் குடுமியான் குப்பம் பகுதியில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களை பிடிக்கச் சென்ற போது, தலைவெட்டி கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவன், காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது தற்காப்புக்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவன் சம்பவ இடத்திலேயே பலியானான். மீதமுள்ள 5 பேரை கைது செய்த போலீசார் அந்த கும்பல் உருட்டி விளையாடிய துண்டிக்கப்பட்ட ரவுடி வீராவின் தலையையும் மீட்டனர்.

கடலூரில் கஞ்சாவிற்பனை தொடர்பாக வீராவுக்கும், கிருஷ்ணனுக்கும் போட்டி இருந்து வந்துள்ளது. இதில் 2015 ஆம் ஆண்டு கிருஷ்ணனின் கூட்டாளியான சதீஷ் என்பவர் கொல்லப்பட்டார். சதீஷ் கொலை வழக்கில் வீரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் தனது நண்பன் சதீஷ் கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் கிருஷ்ணன் தனக்கென்று ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கியுள்ளான்.

அதே நேரத்தில் வீராவோ கஞ்சா வியாபாரத்தை ரகசியமாக செய்தாலும், படகுகளை வாடகைக்கு விடுவது, பைனான்ஸ் விடுவது பழக்கடை என தனது ரூட்டை அரசியல் பக்கம் திருப்பியுள்ளான். மேலும் பிரபல கட்சி ஒன்றில் சேர்ந்து முக்கிய பொறுப்பு பெறும் எதிர்பார்ப்பில் இருந்துள்ளான். வீரா அரசியலுக்குள் நுழைந்து செல்வாக்கு பெற்றால், பழிவாங்குவது கடினம் என்பதால், தற்போது இருந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கிருஷ்ணன், தனது நண்பன் கொலைக்கு பழிவாங்க, ரவுடி வீராவை தலையை வெட்டி கொலை செய்து விட்டு தலையை தூக்கிச்சென்று உருட்டி விளையாடி கடலூரில் தன்னை தாதாவாக நிலை நிறுத்த முயன்றுள்ளான்.

வீரா போல இன்னொரு ரவுடி உருவாவதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் தலைவெட்டி கிருஷ்ணனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் கடலூரில் கஞ்சா விற்பனையை தடுக்க தவறியதால் அடுத்தடுத்த கொலைகள் அரங்கேறுவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments