வேலைக்கு சென்ற மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்... சந்தேகத்தில் கொன்றதாக தகவல்

0 3752

தேனி மாவட்டம் டி. மீனாட்சிபுரத்தில் சந்தேகத்தின் காரணமாக கணவன் மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தேவாரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டீ மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் சந்திரன் - முனியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பையன்கள் உள்ளனர். சந்திரன் கூலி வேலை செய்து வரும் நிலையில் முனியம்மாள் கேரளாவில் உள்ள ஏலதோட்டங்களில் தினக்கூலி வேலைக்காக ஜீப்பில் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சந்திரனுக்கும் முனியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனுடன் சண்டையிட்டுக் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டில் வந்து இருந்துள்ளார் முனியம்மாள். மேலும் அவர் கேரளாவில் ஏலதோட்ட வேலைக்கு செல்வது கணவரான சந்திரனுக்கு பிடிக்காமல் இருந்து வந்ததுள்ளது. இதன் காரணமாக வேலைக்கு செல்ல வேண்டாம் என சந்திரன் மனைவி முனியம்மாளை பலமுறை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கணவனது பேச்சை கேட்காமல் தொடர்ந்து முனியம்மாள் வேலைக்காக தொடர்ந்து ஏலதோட்டத்திற்கு சென்று வந்துள்ளார்.இதனையடுத்து சந்திரன் புதனன்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்த முனியம்மாளை மீனாட்சிபுரம் மேட்டுப்பட்டி இடையே வழிமறித்து சண்டையிட்டுள்ளார். ஆனால் முனியம்மாள் கணவரது பேச்சை கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முனியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த மனைவியின் உடலை அங்கேயே விட்டுவிட்டு சந்திரன் அங்கிருந்து மீனாட்சிபுரம் பகுதிக்கு சென்று உள்ளார்.

இதனிடையே தகவல் அறிந்த தேவாரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட முனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை கொலை செய்த கணவன் சந்திரனை கைது செய்த தேவாரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் நடத்திய விசாரணையில், சந்திரன் செலவுக்காக முனியம்மாளிடம் பணம் கேட்டதாகவும் ஆனால் அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்திரன் தன் மனைவியை வெட்டிக் கொன்றதாக தெரியவந்துள்ளது. ஆனால் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே சந்திரன் முனியம்மாளை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மனைவியின் மேல் ஏற்பட்ட கோபத்தில் கணவனே மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் தேவாரம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments