யானையின் கோரைப் பற்களைக் கடத்தி விற்க முயற்சி... மாறு வேடமிட்டுத் தூக்கிய வனத்துறையினர்!

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூர் பகுதியில் இறந்த பெண் யானையின் கோரைப் பற்களைத் திருடிக் கடத்தி விற்க முயன்றவர்களை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள துணிக்கடையில் பெண் யானையின் தந்தத்தைக் கடத்திக் கொண்டுவந்து விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, துணிக்கடைக்குத் துணி வாங்குவதைப் போல மாறு வேடத்தில் வனத்துறையினர் சென்று கண்காணித்தனர். அப்போது, அந்தக் கடைக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரித்த போது, அவரிடம் பெண் யானையின் கோரைப் பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர் சேத்துமடை அருகேயுள்ள தம்பதி மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் மணியன் என்பதும், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் சென்றபோது இறந்து கிடந்த பெண் யானையின் மண்டை ஓட்டிலிருந்து யானையின் கோரைப் பல்லை எடுத்து வந்து வேட்டைக்காரன் புதூர் பகுதியில் உள்ள துணிக் கடை உரிமையாளர் மோகன்ராஜ் என்பவரிடம் விற்க வந்ததும் தெரியவந்தது. மோகன் ராஜ் மருத்துவ பயன்பாட்டுக்காக யானையின் கோரைப்பல்லை வாங்க முயற்சி செய்துள்ளார்.
விசாரணைக்குப் பிறகு, யானையின் கோரைப் பல்லைக் கடத்தி வந்த மணியன் மற்றும் வாங்க முயன்ற மோகன்ராஜ் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன் மீது ஏற்கனவே சந்தன மரம் வெட்டிய வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இறந்து கிடந்த பெண் யானை தொடர்பாக அறிக்கை கொடுக்கத் தவறியதாக வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.
Comments