ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் தாய்க்கு உணவு தர மறுக்கும் மகன்... சொத்துக்களை மீட்டுத் தர கோரிக்கை!

0 8384

சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு உணவுக்கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தும் மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் வயதான தாய் ஒருவர் கண்ணீர் வடித்த சம்பவம் பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கமரியா பேகம். 72 வயது மூதாட்டியான இவர் தன்னுடைய கணவர் வெளிநாட்டில் இருந்து பொருளீட்டி அனுப்பிய பணத்தை கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியுள்ளார். பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள் கட்டியுள்ளார். இந்த நிலையில் பெற்றோரின் இறுதி காலம் வரை நன்கு பராமரிப்பதாக மகன் அளித்த வாக்குறுதியை நம்பிய கமரியா பேகம், தனது கணவர் பெயரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களையும் தனது மகன் அஜ்மீர் காஜா மைதீன் பெயரில் எழுதி வைத்துள்ளார். கோடிக்கணக்கான சொத்துகளைப் பெற்றுக்கொண்ட மகன் சொத்துகளை அள்ளித் தந்து வயதான காலத்தில் தள்ளாடும் தெய்வத்திற்கும் மேலான தாய் தந்தையரை தற்போது கொடுமைப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகனின் கொடுமையை தாங்கமுடியாமல் வயதான காலத்தில் ஊன்றுகோல் உதவியுடன் வந்த கமரியா பேகம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”எனது கணவர் மூலம் ஈட்டிய கோடிக்கணக்கான சொத்துகளை எங்களது ஒரே மகன் அஜ்மீர் காஜா மைதீன் பெயரில் எழுதி வைத்தோம். தற்போது கட்டிடங்களில் இருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரம் வாடகை வருவாய் வருகிறது. அதனை அனுபவித்து வரும் காஜா மைதீன் எங்களுக்கு ஒரு வேளை உணவு கூட அளிக்காமல் கொடுமைபடுத்தி வருகிறார். மேலும் நோயாளியான தனக்கும் தன்னுடைய கணவருக்கும் மருந்து மாத்திரைகள் கூட வாங்கி தர மறுக்கிறார்” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோடிக்கணக்கான சொத்துக்களை தங்களை நம்ப வைத்து ஏமாற்றி கொடுமைப்படுத்தி வரும் மகன் அஜ்மீர் காஜா மைதீன் மீது நடவடிக்கை எடுத்து தங்களது சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க வயதான தாய் முறையிட்டார். ஆசை ஆசையாய் வளர்த்த மகன் கோடிக்கணக்கான சொத்துகளை பெற்றதும் தாய் தந்தைக்கு உணவுக் கூட கொடுக்காமல் நன்றி மறந்து கொடுமைப்படுத்திய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments