சொத்துக்காக பெற்ற குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்த தந்தை... நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி இறந்த சில நாட்களில் வேறு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து, சொத்துக்காக பெற்ற குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்து சித்திரவதை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பலம் அருகே அரசர் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கடந்த 19 வருடம் முன் கீழ்குளம் பகுதியை சேர்ந்த சுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்டெபி, ஸ்டெபின் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வரும் செல்வராஜ் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் வேறு பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் மனைவி சுதா மற்றும் இரு குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார்.
பின்னர் அவ்வபோது சுதா வீட்டிற்கு வரும் செல்வராஜ் சொகுசு மற்றும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் பெயரில் இருந்த நிலங்களை விற்பனை செய்து விட்டு பணத்துடன் தலைமறைவாகி விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மனம் உடைந்த சுதா குழந்தைகளை பராமரிக்க போதிய பணம் இன்றி மன விரக்தியில் நோய் வாய்ப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வராஜ் இரு குழந்தைகள் மற்றும் மாமியார் ராஜத்தையும் தான் பார்த்து கொள்வதாக கூறி வீட்டிலே வைத்து கவனித்து வந்தார். ஆனால் மனைவி இறந்த 41 நாளிலேயே குளச்சல் பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் அஸ்வதி எனவரை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அதற்கு இடையூறாக இருந்த மாமியார் ராஜத்தை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
மேலும் தனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைக்கொள்ளாத செல்வராஜ் வீட்டின் எதிரே இருந்த 20 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் விற்க முயன்றுள்ளார். இதற்கிடையே தனது 2 சவரன் மதிப்பிலான நகையை பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த மகளை சித்திரவதை செய்த செல்வராஜ், தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து இரு குழந்தைகளுக்கும் உணவு கூட கொடுக்காமல் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் பயந்துபோன குழந்தைகள் இருவரும் உறவினர்கள் உதவியுடன் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர், இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் குழந்தைகளை மீட்ட நிலையில் செல்வராஜ் மற்றும் அவரது இரண்டவது மனைவி அஸ்வதி ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து தலைமறைவாகியுள்ள இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உறவினர்கள் பூட்டி கிடக்கும் செல்வராஜ் வீட்டின் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Comments