பணி மனையில் நிறுத்தி வைத்திருந்த பேருந்தின் பேட்டரி பெட்டியில் 4 அடி நீள பாம்பு... பயணிகள் அதிர்ச்சி..!

சேலத்தில் இரவில் நிறுத்திய பேருந்தை காலையில் இயக்க முற்பட்டபொழுது பேட்டரி பெட்டியில் சுமார் 4அடி நீளமுள்ள பாம்பு இருந்தது ஓமலூர் பகுதியில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் என சுமார் 150க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதில் நகர பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் என 20க்கும் பேருந்துகளை பணிமனையில் தினமும் இரவில் நிறுத்தியபின் காலையில் போக்குவரத்துக்காக எடுத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் பணிமனையை சுற்றிலும் மரம், செடி கொடிகள் என புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இரவில் பேருந்துக்குள் பாம்புகள் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே செவ்வாயன்று பேருந்தில் பேட்டரிகளை பராமரிப்பதற்காக, பயணிகள் அமரும் சீட்டுக்கு அடியில் உள்ள பேட்டரி வைக்கும் பெட்டியில் சுமார் 4அடி நீளமுள்ள பாம்பு இருந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் பயணிகள் பயணம் செய்யும் பேருந்து இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் இருந்து பாம்புகள் வெளியே வந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும். இதுமாதிரியான பேருந்துகளில் பாம்புகள் வருவதை தடுக்க ஓமலூர் பணிமனை சுற்றிலும் சுற்றுசுவர் கட்டினால் முற்றிலும் தடுக்கமுடியும் என்பது அரசு போக்குவரத்து ஊழியர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் கொரோனா காலகட்டத்தில் பல மாதங்கள் பேருந்துகள் நிறுத்தியே இருந்ததால் அப்பொழுது பாம்பு இருப்பது போல் எடுத்த வீடியோவாக இருக்கலாம் என்றும், அதை தற்பொழுது பதிவேற்றம் செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எப்படியோ பயணிகளை ஏற்றி செல்லும்போது பேருந்துகளை சரிவர சுத்தம்செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.
Comments