பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெற்றோர் தற்கொலை!

0 9339

கன்னியாகுமரி அருகே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள சுண்டபட்டிவிலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அப்பகுதியில் தச்சு வேலை செய்து வந்த கண்ணன், தன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கண்ணனுக்கு , சரஸ்வதி என்ற மனைவியும், அனுஷ்கா என்ற 10 வயது மகளும், விகாஸ் என்ற நான்கு வயது மகனும் உள்ளனர்.

கண்ணனின் மகன் விகாசிற்கு சில நாட்களாகவே வலிப்பு நோய் இருந்துவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கண்ணனின் மனைவி சரஸ்வதி, வேளைக்குச் செல்லாமல் முழு நேரமும் வீட்டிலேயே தன் மகனைக் கவனித்து வந்துள்ளார் . கண்ணனும், மகனுக்கு வலிப்பு வரும்போதெல்லாம் , வேளைக்குச் செல்லாமல் மகனைக் கவனித்து வந்துள்ளார். தொடர்ந்து, சில நேரங்களில் மகனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது . கண்ணனின் வருமானமும் மகனின் மருத்துவச் செலவிற்குக் கைகொடுக்கவில்லை. மகனின் மருத்துவச் செலவிற்காகக் கண்ணன் , கடன் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விகாசின் வலிப்பு நோய்க்குத் தீர்வும் கிடைக்கவில்லை. ஒரு புறம் பண சுமை ஏறிக்கொண்டே போக, மறுபுறம் மகனின் உடல்நலம் குறித்த கவலையால்,கண்ணன்- சரஸ்வதி தம்பதிக்கு மனச்சுமையும் ஏறிக்கொண்டேபோனது. மகன் வலிப்பு நோயால் அவதிப்படுவதைக் கண்டு கடும் மன உளைச்சலில் இருந்தனர் கண்ணன்-சரஸ்வதி தம்பதியினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு, மகள் அனுஷ்காவிற்கும், மகன் விகாசிற்கும் விஷம் கொடுத்த பின், கண்ணனின் மனைவி சரஸ்வதியும் விஷம் அருந்தியுள்ளார் . தொடர்ந்து, கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காலையில் வெகுநேரம் ஆகியும், கண்ணனின் வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டைத் திறந்து பார்த்தபோது, கண்ணன், கண்ணனின் மனைவி சரஸ்வதி, மகள் அனுஷ்கா, மகன் விகாஸ் ஆகிய நான்குபேரும் சடலமாகக் கிடப்பதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, ஈத்தாமொழி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கண்ணனின் வீட்டில் மேற்கொண்ட ஆய்வில் கடிதம் ஒன்று கிடைத்தது. சரஸ்வதியின் தாயாருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், தங்களது சாவிற்கு யாரும் காரணமில்லை என்றும், மகனின் வலிப்பு நோயால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகனின் மருத்துவச்செலவிற்குப் பணமில்லாமல், மகன் படும் வேதனையைத் தாங்கவும் முடியாமல், சொந்த பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோயில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments