விவசாய வேலைக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கியதில் 5 பேர் பலி ; 24பேர் படுகாயம்

0 1081

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா மணியாச்சி அருகே குட்டியானை வாகனம் ஓடைக்குள் கவிழ்ந்ததில் அதில் பயணித்த விவசாய கூலி தொழிலாளிகள் ஐந்து பேர் பலியானார்கள், 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் படுசோகத்தில் காட்சியளிக்கிறது, பாளை அரசு மருத்துவமனை.

நெல்லை மாவட்டத்திலுள்ள மணப்படை மற்றும் மணல்காடு கிராமத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட சவரிமங்கலம் கிராமத்துக்கு உளுந்து காய் பறிப்பதற்காக விவசாய கூலி தொழிலாளிகள் 35பேர் குட்டி யானை வாகனத்தில் சென்றனர். அந்த குட்டியானை வாகனத்தை திருமலை கொழுந்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரை என்பவர் ஓட்டியுள்ளார்.

அவ்வாகனம் மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதநிலையில் நிலைதடுமாறி சாலைக்கு அருகிலுள்ள ஓடைக்குள் கவிழ்ந்தது, அதில் பயணித்த 35பேரில் பேச்சியம்மாள், மலையரசி, கோமதி, ஈஸ்வரி, மற்றொரு பேச்சியம்மாள் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 24 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் இந்த விபத்தில் இறந்த ஐந்து பேரின் உடலும் மணியாச்சியில் இருந்து உடற்கூறு பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி பாளையங்கோட்டை மேட்டு திடலில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிக்க வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 24பேரும் அவசர சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அவசர அவசரமாக 108 ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் இவ்விபத்தில் லேசான காயமடைந்த 6 பேர் முதலுதவி சிகிச்சைக்காக ஓட்டபிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த எதிர்பாராத விபத்தால் மரணத்தைத் தழுவிய விவசாய கூலித் தொழிலாளிகளின் சொந்த ஊரான மணப்படை மற்றும் மணல்காடு கிராமமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வழித் தெரியாமல் உள்ளூர் மக்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

ஏ சாவே, உனக்கு ஒரு சாவு வராதா என்றவாறு இறந்தவர்களின் உறவினர்களின் கதறலானது, கண்ணீராய் காற்றில் கலந்து செல்கின்றன. உறவுகளை இழந்து வாடுபவர்களும் தவிப்பவர்களும் விடும் கண்ணீரானது கல்மனதையும் கரைக்கும் வகையில் கனமழையாகி கரைபுரண்டு ஓடுகின்றன.

விபத்தில் இறந்தவர்களின் கிராமம் மட்டுமன்றி ; படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பாளை அரசு மருத்துவமனையும் ஆழ்ந்த சோகத்தில்தான் உள்ளது.

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து மருத்துவர்களிடமும் விபரங்களை கேட்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார் . பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும் , காயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த கோர விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments