ஊராட்சி கிணற்றை கண்டுபிடித்து தரக்கோரி ஊர் மக்கள் போராட்டம் : குமரியில் பரபரப்பு

0 1886

பிரபல தமிழ் படம் ஒன்றில் கிணற்றைக் காணவில்லை என கூறும் வடிவேலுவின் காமெடி புகாரானது, ஆங்காங்கே நிஜத்திலும் அரங்கேறி வருவது காலத்தின் கொடுமையாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன ஊராட்சி கிணற்றை கண்டுபிடித்து தரக்கோரி ஊர் மக்கள் காந்திய வழியில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்குளம் மொட்டவிளை பகுதியில் காணாமல் போன ஊராட்சி கிணற்றை கண்டுபிடித்து தர கேட்டு கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து, கஞ்சி காய்ச்சி, சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவட்டத்தின் மொட்டவிளை கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவர் செல்லத்துரை என்பவர் இரணியல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கல்குளம் வட்டம் குருந்தன்கோடு ஏ வருவாய் கிராமத்தில் கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டவிளை பகுதியில் பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்தது.

இந்நிலையில் கடந்த 2020ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல் காலங்காலமாக ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றை காணவில்லை. மேலும் கிணறு இருந்த இடத்தில் அதன் சுவடு தெரியாத வகையில் சிலர் கிணற்றை மண் நிரப்பி அவற்றை சமதளமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் கிணறு இருக்கும் என்று நினைத்து குடிநீர் எடுக்க வந்த உள்ளூர் மக்கள் கிணற்றை காணாமல் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மேலும் கிணற்றை சுற்றியுள்ள பகுதிக்கு சொந்தக்காரர் தனது சொத்தோடு சேர்த்து குடிநீர் கிணற்றையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என ஊர் மக்களால் கூறப்படுகிறது.

இந்த குடிநீர் கிணற்றை ஆக்கிரப்பு செய்திருப்பதால், ஊர் மக்கள் குடிநீர் எடுக்க வழியில்லாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து கட்டிமாங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் குருந்தன்கோடு ஏ வில்லேஜ் கிராம நிர்வாக அலுவலர், கல்குளம் வட்டாச்சியர் மற்றும் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் நேரில் சென்று மனு கொடுத்துள்ளார்.

அப்புகாரில் கடந்த நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக மொட்டவிளை கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஊர் கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்ததற்கான ஆதாரங்களை உரிய ஆவணங்களைக் காட்டி விளக்கியுள்ளார்.

ஆயினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்றும், பொது கிணறு இருந்த பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கிணற்றை கண்டுபிடித்து தருமாறும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான புகாரை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளார்.

மேலும் இப்புகார் மனுவை பெற்றுக் கொண்டதற்கான உரிய சிஎஸ்ஆர் ரசீதையும் இரணியல் காவல் நிலையத்தில் முறையாகப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மேற்கண்ட புகார் தொடர்பாக குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருவதாகவும், உடனடியாக கிணற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஆயினும் காலம்தான் கடந்ததே தவிர, எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தியடைந்த உள்ளூர் மக்கள் மிகவும் வேதனைக்குள்ளாயினர்.

இந்நிலையில் அந்த கிணறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் திடீரென இரவோடு இரவாக கடை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அதனையறிந்து, அதிர்ச்சியடைந்த மொட்டவிளை கிராம மக்கள் ஆண், பெண் பாகுபாடின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, கிணற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை முன் திரண்டு, ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் போன ஊராட்சி கிணற்றை மீட்டு தரக்கோரி, கஞ்சி காய்ச்சி, காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்” என்பதும், “தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே” என்பதும் ஆன்றோர் வாக்கு. அப்படியிருக்கும் போது, ஊர் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்திருப்பது தவறான முன்னுதாரணமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments