மெரினா கடற்கரை சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்

0 7043
சென்னை மெரினா கடற்கரை அருகே சாலையில் கிடந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்

சென்னை மெரினா காமராஜர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தவறவிட்ட ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார். 

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி. இவர் கடந்த 12-ஆம் தேதி காலை சவாரிக்கு சென்று விட்டு மெரினா காமராஜர் சாலையில் வந்தபோது ராணிமேரி கல்லூரி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு பை கீழே விழுந்ததை பார்த்துள்ளார்.

உடனடியாக ஆட்டோவை நிறுத்தி அதை எடுத்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்த பணப்பையை தவறவிட்ட வாகன ஓட்டி யார் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி, மெரினா காவல் நிலையத்தில் பணப்பையை ஒப்படைத்துள்ளார். இவரது நேர்மையை பாராட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.

பெட்ரோல், கேஸ் விலை உயர்ந்து வரும் சூழலில் நாள்தோறும் 12 மணி நேரம் ஆட்டோ ஓட்டினாலும் 200 ரூபாய் வீட்டிற்கு எடுத்து செல்வதே சவாலாக இருக்கிறது என்று தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி, கீழே கிடந்த பணத்தை பார்த்ததும் அதை தவறவிட்டவர்கள் என்ன அவசர தேவைக்காக எடுத்து சென்றாரோ என்று தோன்றியதாக தெரிவித்தார். அந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்ததே தனக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

தனது வறுமையிலும் மற்றவர் பணத்திற்கு ஆசைப்படாமல் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி, நேர்மைக்கு இலக்கணமாய் இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

இதனிடையே பணத்தை தவறிவிட்ட நபர் மெரினா காவல் நிலையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ள போலீசார், பணப்பை விழுந்த காந்தி சிலை அருகே சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments