இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மறைத்து காதல்... இளம்பெண் தற்கொலையால் அதிர்ச்சி!

0 10735

மணப்பாறை அருகே இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கட்டடத் தொழிலாளி ஒருவர், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததால் அப்பெண் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள பேச்சக்கம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி அருண்பாண்டியன். இவருக்கும் மாலைப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமியின் மகள் ஆனந்திக்கும் மில் ஒன்றில் வேலை பார்க்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அருண்பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் தனக்கு திருமணமானதை மறைத்து ஆனந்திக்கு ஆசை வார்த்தைகள் கூறி, காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் அருண்பாண்டியன்.

காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி ஆனந்தியுடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அருண்பாண்டியன் திருமணமாகி குழந்தை பெற்றவர் என்கிற விவரம் ஆனந்திக்கு தோழிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆனந்தி இரு நாள்கள் யாருடனும் பேசாமல் மன வருத்தத்துடன் இருந்துள்ளார். பெற்றோருடனும் இந்த விவகாரம் குறித்து கூறவில்லை.

இந்த நிலையில், காதலர் தினத்துக்கு ஒருநாள் முன்னதாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஆனந்தி. இதில் படுகாயமடைந்த அவர், திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்துஆனந்தியின் வாக்குமூலத்தை பெற்ற வையம்பட்டி போலீசார் அருண்பாண்டியனை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர். இதற்கிடையே செவ்வாயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன் மீது கூடுதலாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இரண்டு குழந்தைக்கு தந்தையான அருண் பாண்டியன், காதல் நாடகம் மூலம் அப்பாவி பெண்ணை ஏமாற்றியதால், தீக்குளித்து இளம்பெண் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments