'இரு முறை எம்.எல்.ஏ குடியிருக்க காணி இடமில்லை!' - மதுரை அதிர வைத்த நன்மாறன்

0 16068

கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டாலேயே நான்கு , ஐந்து தலைமுறைக்குச் சொத்து சேர்த்து விடுபவர்களுக்கு மத்தியில் ,'என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை, அரசு வீடு ஒதுக்குங்கள்' என்று ஆட்சியரிடத்தில் மனு கொடுக்க வந்த நன்மாறனை பார்த்து மதுரையே ஆச்சரியத்தில் இருக்கிறது.

பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்கள் எப்படி எளிமையாக இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நன்மாறன் மிக முக்கியமானவர். தொழிற்சங்கவாதியாகப் பணியாற்றிய பிறகு , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல நிலைகளில் பணியாற்றியவர். பல நூல்களையும் எழுதியிருக்கிறார். நகைச்சுவை கலந்த அவருடைய எளிமையான மேடைப்பேச்சால் `மேடைக் கலைவாணர்' என்று அழைக்கப்பட்டவர். இரண்டு முறை மதுரையில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். தற்போது எம்.எல்.ஏ பென்ஷன் வாங்கினாலும், அதைக் அப்படியே கட்சிக்குக் கொடுத்து விடுகிறார். கட்சி கொடுக்கும் அலவன்ஸில்தான் நன்மாறனின் வாழ்க்கை ஓடுகிறது.

நன்மாறனின் இரு மகன்களும் சாதாரண பணிகளில்தான் இருக்கின்றனர். அவர்கள், தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மேலப்பொன்னகரத்தில் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்துவரும் நன்மாறன் தான் வசிக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். இதனால், அரசு வழங்கும் இலவச வீட்டுக்கு மனு கொடுக்க மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனைவியுடன் நன்மாறன் வந்தார். இரு முறை எம்.எல்.ஏ ஆகியுள்ள அவர் சாமானியன் போல வீடு கேட்டு வந்தது அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கலெக்டர் அலுவலகத்திலிருந்த செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நன்மாறன், ``குடிசை மாற்று வாரியம் மூலம் ராஜாக்கூரில் ஏழைகளுக்கு அரசு வழங்கும் வீடு ஒன்றைத் ஒதுக்கப் பரிசீலிக்க வேண்டுமென்று கலெக்டரிடம் மனு அளிக்க வந்தேன். கலெக்டர் இல்லை. அதனால் டி.ஆர்.ஓ-விடம் கொடுத்திருக்கிறேன். அவர்கள் பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். என் மனுவுக்கு நம்பர் போட்டுத் தந்திருக்கிறார்கள்" என்றார் வெள்ளந்தியாக.

இப்படியும் ஒரு அரசியல்வாதியா என்று மதுரை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments