கேரள ப்ராடு ஜுவல்லரி சுருட்டிய ரூ. 40 கோடி... ஏமாந்த பெண்கள் கண்ணீர்..! தூங்கி வழியும் EOW போலீஸ்

0 167993
கேரள ப்ராடு ஜுவல்லரி சுருட்டிய ரூ 40 கோடி ஏமாந்த பெண்கள் கண்ணீர்..! தூங்கி வழியும் EOW போலீஸ்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனைக் காண்பித்து 40 கோடி ரூபாய் வரை சுருட்டிய புகாருக்குள்ளான கே.எஃப்.ஜே. நகைக்கடை மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரைக் கண்டித்து பணத்தைப் பறிகொடுத்தவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

ஊருக்கே உண்மையை சொல்வதாக தம்பட்டம் அடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து மூளை சலவை செய்யும் அளவுக்கு விளம்பரம்..!

விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் சிக்கிய வாடிக்கையாளர்களிடம் குறைந்த விலையில் தங்கம் தருவதாக ஆசைக்காட்டி 40 கோடி ரூபாய் சுருட்டல்..! போன்ற புகார்களால் ஒரு காலத்தில் கே.எஃப்.ஜே என்று அழைக்கப்பட்ட கேரள ஃபேசன் ஜூவல்லரி இன்று கேரள ஃப்ராடு ஜுவல்லரியாக உருமாறி நிற்கின்றது.

சென்னையில் தியாகராய நகர், மயிலாப்பூர், அண்ணா நகர் என்று 3 இடங்களில் கடை திறந்து நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மொட்டை போட்ட கடையின் பங்குதாரர்களான சுஜீத் செரியன், அவரது மனைவி தானியா, சகோதரர் சுனில் செரியன் ஆகியோர் தான் இந்த மோசடியின் மூலப் புள்ளிகள் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் தங்களிடம் நகைச் சீட்டு கட்டியவர்களை மட்டும் அல்ல, ஒவ்வொரு வீட்டு டிவியிலும் தோன்றி நகை சீட்டு கட்டச் சொன்ன நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனையும் ஏமாற்றியதாக கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் ‘ஃப்ராடு’ சகோதரர்களான சுஜித் செரியன் மற்றும் சுனில் செரியனுக்கு ஆதரவுக்கரம் நீட்டி பணம் பறிகொடுத்தவர்களை மாதக்கணக்கில் இழுத்தடித்து பஞ்சாயத்து பேசப்பட்டது. இறுதியில் நகைச் சீட்டு மோசடியில் கோடிக் கணக்கில் சுருட்டியதாக எழுந்த புகாரால் வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்ட பின்னரும் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் பணத்தை கொடுத்து விடுவதாகக் கூறி நாடகமாடிய சுஜித் செரியன் மற்றும் சுனில் செரியனின் பேச்சை நம்பி மாதக்கணக்கில் காத்திருந்தனர் அப்பாவி முதலீட்டாளர்கள்.

ஒரு கட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் போராடியதால், சுஜித் செரியன், தானியா, சுனில் செரியன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றபிரிவு போலீசார் சொத்துக்களை விற்று பணத்தை தருவதாக கூறியிருந்தனர். இதனை நம்பி மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் திங்கட்கிழமை ஆவேசத்துடன் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

புகார்தாரர்களை அழைத்து பேசிய காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருவதாக கூறியுள்ளனர். மயிலாப்பூரில் ஷாப்பிங் காம்பளக்ஸ், அடையார் மற்றும் நுங்கம் பாக்கத்தில் பர்க்கர் மேன் என்ற பெயரில் சுஜித் கடைகள் நடத்திவரும் நிலையில், அவரைத் தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என பணத்தை பறிகொடுத்தவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

கேரள ப்ராடு ஜூவல்லரியின் சுஜித் செரியன், தானியா, சுனில் செரியன் உள்ளிட்ட மோசடி பேர்வழிகளை கைது செய்து அவர்கள் தொடர்பான சொத்துக்களை முடக்கி சட்டத்தின் படி அதனை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை திருப்பி கொடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

அதே நேரத்தில் மோசடியாளர்கள் தப்பிக்க ஏதுவாக காவல்துறையினர் கால அவகாசம் வழங்க கூடாது என்பது பாதிக்கப்பட்டவர்களின் ஆதங்கமாக உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments