அமலுக்கு வந்தது கட்டாய ஃபாஸ்டேக்..!
நாடு முழுவதும் சுங்கக் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பாஸ்டேக் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், இதனால், எரிபொருள் செலவும் அதிகரிப்பும், காலநேரமும் வீணாவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்திருந்தன. இதையடுத்து இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறையை, கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதற்காக வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனை வாகனங்களில் ஒட்டிக் கொள்ளலாம் என்றும் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கூறியிருந்தது. இதன் மூலம் சுங்கச் சாவடிகளை விரைவாகக் கடந்து செல்லலாம் என்றும் அரசு தெரிவித்தது. வாகன உரிமையாளர்கள் பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்காக அவ்வப்போது காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் முறை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அவ்வாறு அதற்கான ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது.
இதற்காக சுங்கச் சாவடிகளில் உள்ள அனைத்துத் தடங்களும் பாஸ்டேக் வழிகளாக மாற்றப்பட்டன. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பாஸ்டேக் வாங்காத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று பாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கிச் சென்றனர்.
இந்தநிலையில் வங்கி பரிவர்த்தனை கோளாறு, இணைய சேவை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கட்டணங்கள் வசூலிப்பதில் சிரமம் ஏற்பட்டால், பிரத்யேக கருவிகள் மூலம் சுங்கச் சாவடி ஊழியர்கள் பணம் வசூல் செய்கின்றனர். வங்கி வைப்புத் தொகை குறைவாக இருந்தாலும் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளதால், பாஸ்டேக் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத ஓட்டுநர்களால் சர்ச்சை எழுந்ததாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆத்தூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பாஸ்டேக் முறையை அமல்படுத்தி கட்டணம் வசூலிக்கப்பட்டது. போதிய வங்கி இருப்பு அல்லாத, பாஸ்டேக் வாங்காத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
Comments