13 வயது சிறுமியின் எடை 11 கிலோ மட்டுமே... ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினியில் தவிக்கும் குழந்தைகள்!

0 115581

ஏமன் நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவும் பசி மற்றும் பட்டினியால், 13 வயது நிறைவடைந்துள்ள சிறுமி 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

ஏமன் நாட்டில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. சவூதி அரேபியா தலைமையிலான அதன் கூட்டணி நாடுகள் ஆதரவளிக்கும் ஏமன் அரசுக்கும் ஈரான் ஆதரவளிக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட காலமாகப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ள நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏமன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளை உணவைக் கூட வயிறு நிறைய சாப்பிட முடியாதவர்களாக உள்ளனர்.  ஏமன் நாட்டில் உள்ள ஏடன், ஹோடைடா மற்றும் தைஸ் மற்றும் சனா உள்ளிட்ட நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏமன் நாட்டில் பசியால் தவிக்கும் லட்சக்கணக்கான சிறுமிகளுள் ஒருவர் தான், அஹ்மதியா தாஹெர் (( ahmadiya Taher )). தற்போது 13 வயதாகும் அஹ்மதியாவின் உடல் எடை வெறும் 11 கிலோ மட்டும் தான் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறாதா? ஆனால், நம்பித்தான் ஆகவேண்டும். தற்போது சனா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறக் காத்திருக்கிறார் அஹ்மதியா. மருத்துவமனைக்கு வருவதற்கே நண்பர்கள் மற்றும் பிறரிடம் நன்கொடைகள் சேகரித்து தாய் மற்றும் சகோதரருடன் நடந்தே சனா நகருக்கு வந்துள்ளார் என்பது தான் சோகத்திலும் சோகம்.

அஹ்மதியாவின் தந்தை உள்நாட்டுப் போரில் இறந்துபோனார். அதற்குப் பிறகு அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் போய் விட்டது. பல நேரம் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்து பசியாறியுள்ளனர். பாதிக்கப்பட்டது அஹ்மதியா மட்டுமல்ல, ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் நான்கு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2021 ல் 23 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது ஐ.நா சபை.

ஏமன் நாட்டில் அதிகாரப்பூர்வமாகப் பஞ்சம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அந்த நாடு உலகிலேயே மிகவும் மோசமாக மனிதாபிமான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது என்று ஐ.நா கூறியுள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக, பட்டினி மற்றும் நோயிலிருந்து தடுக்கும் ஊட்டச்சத்து மற்றும் உணவு வழங்கும் சேவைகள் நாடு முழுவதும் தடை பட்டுள்ளது. நாட்டின் மனிதாபிமான சேவைக்குத் தேவையான 3.4 பில்லியன் டாலர்களில் 1.9 பில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைப்பதாகத் தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளன.

சனா நகர் மருத்துவமனைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு வார்டின் தலைவர் அப்துல் மாலிக் அல் - வாகேடி (( Abdul Malik Al-Wahedi )), “மருத்துவமனைகள் அனைத்திலும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக நோயாளிகள் இப்படியே குவிந்து வந்தால், இனி சமாளிக்க முடியாது” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments