தொடரும் விலை உயர்வு... உச்சம் நோக்கி பெட்ரோல், டீசல் விலை.!

0 3085

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளதால் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுச் சென்னையில் 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்பப் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றிஅமைத்து வருகின்றன. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் பத்து சென்ட் உயர்ந்து 63 டாலர் 53 சென்ட்களாக உள்ளது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 19 காசுகளாக உள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 44 காசுகளாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை 95 ரூபாய் 46 காசுகளாகவும், ஜெய்ப்பூரில் டீசல் விலை 87 ரூபாய் 69 காசுகளாகவும் உள்ளன.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் எதிரொலியாகச் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்து காய்கறிகள், பழங்கள், தானியங்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இதேபோல் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, சென்னையில் 785 ரூபாயாக உள்ளது.

பெட்ரோல் விலையில் 61 சதவீதமும், டீசல் விலையில் 58 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரியாகவே செல்கிறது. கொரோனா காலத்தில் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்ததால், மத்திய மாநில அரசுகள் வருவாயை ஈடுகட்ட வரியை உயர்த்தின.

இப்போது மீண்டும் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அதிகரித்த வரியை குறைத்தால், விலை குறையுமென பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதே போன்று கொரோனா காலத்தில் உபயோகம் குறைந்ததால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள், உற்பத்தியை குறைத்துக் கொண்டன. இப்போது மீண்டும் தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்காததும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments