கிருஷ்ணன் தூக்கிய கோவர்த்தன கிரி கல்லை ஆன்லைனில் விற்ற சென்னை நபர்... சென்னை வந்து தூக்கிச் சென்ற உ.பி போலீசார்!

0 8331
கோவர்த்தன மலை கற்களை ஆன்லைனில் விற்பனை செய்வதாக போலியாக விளம்பரம் - சென்னையைச் சேர்ந்த நபர் கைது

புகழ்பெற்ற கோவர்த்தன மலை கற்களை விற்பதாக இணைய தளத்தில் விளம்பரம் செய்த சென்னையைச் சேர்ந்த நபரை உத்தரப்பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது கோவர்த்தன மலை. இந்து மக்களால் புனித மலையாக வழிபடப்படுகிறது. புராணத்தின் படி, கோகுலத்தில் வாழ்ந்த மக்கள் கிருஷ்ணனின் சொல்படி இந்திரனுக்குப் படையல் இடாததால் கோபம் கொண்ட இந்திரன் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் மழையைப் பெய்விப்பான். அப்போது, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடைபோல தூக்கிக்கொள்ள ஆயர்களும், ஆவினங்களும் மலைக்குக் கீழே சென்று தஞ்சமடைந்து உயிர் தப்பினர். அதனால், கோவர்த்தன மலையை இந்துக்கள் கடவுள் போல வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான், புனிதமான கோவர்தன மலை கற்களை வீட்டில் வைத்து வழிபட்டால் நன்மை நடக்கும் எனக் கூறி, கோவர்த்தன மலைக் கற்களை ஆன்லைன் விற்பனை தளமான ’இந்தியா மார்ட்; தளத்தில் ரூ.5175 ரூபாய் விலைக்கு விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, உத்தரபிரதேச மாநிலம், மதுரா நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கேஷவ் முக்யா என்பவர் கோவர்தனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும் மத நம்பிக்கையை வணிகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இணைய தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து ’இந்தியா மார்ட்’ ஆன்லைன் விற்பனை தளம் மீது 2 பிரிவுகளில் கோவர்தன காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, இந்தியா மார்ட் நிறுவனத்தின் சார்பில் காவல்துறையினருக்கு அளித்த விளக்கத்தில் பொருட்களை விற்கவும் வாங்கவும் முயற்சி செய்பவர்களுக்கு பாலமாக மட்டுமே, ’இந்தியா மார்ட்’ செயல்படும் எனவும் நேரடி விற்பனையில் இணையதளம் ஈடுபடாது என்பதால் அதற்கும் தங்களுக்கும் எந்தவிதத்திலும் தொடர்பில்லை’ என்று கூறி, தங்களது இணையதளத்தில் கோவர்தன கற்கள் விற்கப்படுவதாக விளம்பரம் செய்திருந்த நபர் தொடர்பான விவரங்களையும் காவல்நிலையத்தில் அளித்தனர்.

அந்த விவரங்களை உத்தரப்பிரதேச மாநில சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்த போது, சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் விளம்பரம் செய்திருந்ததும், இவர் பூஜை பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில் சென்னை வந்த உத்தரப்பிரதேச போலீசார் அசோக் நகர் காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் பிரேம் குமாரை கைது செய்து உத்தரபிரதேசம் அழைத்துச் சென்றனர். உண்மையிலேயே இடைதரகர்கள் மூலம் கோவர்தன கற்களை வாங்கி விற்பனை செய்கிறாரா அல்லது கோவர்தன கற்கள் என மோசடியில் ஈடுபட்டரா என உத்திர பிரதேச போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments